புவனகிரி அருகே தீப்பிடித்து எரிந்த கூரை வீடுகள் : ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

புவனகிரி அருகே இரண்டு கூரை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆயிப்பேட்டை மெயின் ரோட்டில் ஆனந்தாயி, ஞானசேகர் என்ற கூலி தொழிலாளர்கள் சாலையோரமாக கூரைவீடுகளைக் கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில் ஆனந்தாயி வீடு நேற்று நள்ளிரவு எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. காற்று பலமாக அடித்ததால் தீ அருகில் இருந்த ஞானசேகர் வீட்டிலும் பரவி அந்த வீடும் முழுவதுமாக எரிந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

இது குறித்து தகவல் அறிந்த சேத்தியாதோப்பு தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்து, தீ மேலும் பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இரண்டு கூரை வீடுகளிலும் இருந்த கட்டில், பீரோ, சமையல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய்த் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு இழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.