வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ-வான கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை நகல் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ-வாக இருப்பவர் இ.கருணாநிதி. இவரது மகன் ஆன்டோ மதிவாணன், மனைவி மார்லினாவுடன், சென்னை திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் தன்னை துன்புறுத்தியதாக, ஆன்டோ மதிவாணன் வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் அளித்த புகாரின்படி, வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளில் இருவர் மீதும் திருவான்மியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும், கடந்த ஜனவரி 25-ல் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். சிறையில் இருந்த இவர்கள் இருவரும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரின் மனைவி மார்லினா ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கின் கோப்புகளை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது. இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி எஸ்.அல்லி ஜூலை 22-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.