புதுச்சேரியில் டீசல் விலையை ரூ.2 குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.
லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் கூட்டம் புதுச்சேரியில் இன்று துவங்கியது. இந்நிகழ்வுக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ”சிறிய மாநிலமான புதுவைக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர்.
வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எங்கெல்லாம் சாலை விரிவாக்கம் செய்ய முடியுமோ அங்கெல்லாம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. மாநில வளர்ச்சிக்கு பங்களிப்பு உள்ளவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி கொடுக்கும். லாரி உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கையை ஏற்று புதுவையில் டீசல் விலையை ரூ.2 குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.