கால்நடைகளால் ஏற்படும் ஆபத்தைக்கூட கட்டுப்படுத்த இயலாத திறமையற்ற திமுக அரசு : ஓபிஎஸ் கண்டனம்

“கால்நடைகளால் ஏற்படும் ஆபத்தினைக்கூட கட்டுப்படுத்த இயலாத திறமையற்ற அரசாக திமுக அரசு விளங்குகிறது.” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில், சமூக விரோதிகளால் மட்டுமல்லாது, கால்நடைகளாலும் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை அதிகரித்துள்ளது. கால்நடைகளால் ஏற்படும் ஆபத்தினைக்கூட கட்டுப்படுத்த இயலாத திறமையற்ற அரசாக திமுக அரசு விளங்குகிறது.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம், வண்ணாரப்பேட்டை பகுதியில் ஒரு நாய் 29 நபர்களை கடித்துக் குதறியது. இந்த ஆண்டு மே 6-ம் நாள் நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில், நாயினுடைய உரிமையாளர் முன்பே தாய், மகளை நாய் கடித்துக் குதறியது. இந்த ஆண்டு ஜூன் மாதம் மாங்காடு பகுதியில் நாய் கடித்து 11-வது சிறுவன் பாதிக்கப்பட்டது என பல சம்பவங்கள் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இதேபோன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாடு தாக்கி நங்கநல்லூரைச் சேர்ந்த ஒருவர் இறந்தது, ஜூன் மாதம் மாடு முட்டி திருவொற்றியூரின் ஒரு பெண் படுகாயமமைடந்தது, திருவல்லிக்கேணியில் மாடு முட்டி முதியவர் இறந்தது என பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து மாநகராட்சி சார்பில் எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை சென்னை வண்ணாரப்பேட்டையில் மூன்றாவது படிக்கும் பத்து வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியதில் அந்தச் சிறுவனின் இடது பக்கத் தோள்பட்டையில் பலத்த காயமடைந்த நிலையில், அச்சிறுவன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். கடந்த ஓராண்டில், சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மட்டும் கிட்டத்தட்ட 6,000 பேர் நாய் கடித்ததன் காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர்.

நாய் மற்றும் மாடுகளால் மனிதர்கள்மீது தாக்குதல் நடத்தப்படும்போது, அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் தகவல் அளிக்கப்படுகிறது. இருப்பினும், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. உண்மையிலேயே நடவடிக்கை எடுத்திருந்தால், பாதிப்புகள் குறைந்திருக்கும். மாறாக, தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சென்னையில் நாய் கணக்கெடுப்பு துவங்கியுள்ளதாக இன்றைக்கு பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இது எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியவில்லை.

பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்பதைக் கருத்தில் கொண்டு, நாய் மற்றும் மாடுகளினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் களைய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.