‘ஹாத்ரஸ் நெரிசலுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு’ – சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்துக்கு அதிக மக்கள் கூடியதே காரணமென்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே இச்சம்பவத்துக்கு பொறுப்பு என்றும் இந்த துயர சம்பவம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. அக்குழு 119 பேரின் வாக்குமூலங்கள் அடங்கிய தனது அறிக்கையை இன்று சமர்ப்பித்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள், “ஹாத்ரஸில் நிகழ்ந்த நெரிசல் சம்பவத்துக்கு அந்த சத்சங் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்களே பொறுப்பு. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதிக்கப்பட்டவர்களை விட அதிக அளவிலான மக்களை அழைத்தது, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய தவறியது, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்யாதது போன்றதே நெரிசல் சம்பவத்துக்கு காரணம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

சிறப்பு புலனாய்வு குழு, நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், காயமடைந்த பக்தர்கள் உள்ளிட்ட 119 பேரின் வாக்குமூலங்கள் அடங்கிய சுமார் 300 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை இன்று சமர்ப்பித்தது. அறிக்கையில், ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியர் அனிஷ் குமார், காவல் கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் மற்றும் எஸ்டிஎம் மற்றும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய சிக்கந்த்ராவ் சி.ஓ., ஜூலை 2ம் தேதி சத்சங் நிகழ்ச்சியில் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆகியோரின் வாக்குமூலங்கள் அடங்கியுள்ளன. ஆக்ரா ஏடிஜி அனுபம் குல்ஷேத்தா மற்றும் அலிகார் கமிஷனர் சைத்ரா ஆகியோர் இந்த அறிகையைத் தயாரித்தனர். அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நிகழ்ச்சியை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர் கூறுகையில், “பாபா அவரது காலடி மண்ணை சேகரிக்க வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்தே அந்தச் சம்பவம் நடந்தது. பாபாவின் காலடி மண்ணை எடுக்க பக்தர்கள் விரைந்த போது ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். நெரிசலுக்கு மத்தியில் பாபாவின் வாகனம் அந்த இடத்தைவிட்டுச் சென்றது. நிர்வாகிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மட்டுமே எங்களுக்கு உதவினர்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறுகையில், “ஜூலை 2-ம் தேதி 121 பேர் இறப்புக் காரணமாக இருந்த நெரிசல் சம்பவம் நடைபெற்ற போது சுமார் 15 -16 பேர் முகத்தை மூடிய படி கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் நச்சு வாயுவை கூட்டத்தில் தெளித்துவிட்டு காரில் தப்பிச் சென்றனர். போலே பாபாவை சிக்கவைக்க சதி நடந்துள்ளது. நெரிசல் சம்பவம் ஒரு விபத்து அல்ல. அது ஒரு சதிச் செயல்” என்று தெரிவித்திருந்தார்.

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் கடந்த 2-ம் தேதி சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சிக்கந்திரா ராவ் போலீஸார், பாரதிய நியாயசன்ஹிதா சட்டத்தின் பிரிவான மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 2 பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட தேவபிரகாஷ் மதுகர் தலைமறைவானார். பின்னர் அவரும் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே ஜூலை 6-ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த போலே பாபா, நிகழ்ச்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் தப்பமாட்டார்கள் என்று கூறியவர் இந்தத் துயர சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.