ஹாத்ரஸ் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவர் கைது : போலே பாபா பற்றி முக்கிய குற்றவாளி பல்வேறு தகவல்

ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிறு அன்று கைதான முக்கிய குற்றவாளி மதுகரிடம் நடந்த விசாரணையின் பேரில் போலே பாபா பற்றி பல முக்கியத் தகவல்களும் கிடைத்துள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்ட சிக்கந்தராவின் முகல்கடி கிராமத்தில் போலே பாபா ஆன்மிக கூட்டம் நடத்தினார். ஜுலை 2-ல் நடந்த இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 112 பெண்கள் உள்ளிட்ட 121 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிக்கந்தராவ் காவல்துறை வழக்கு தொடர்பாக நேற்று மேலும் இருவரை கைது செய்தது. ரயில் ஏறி தப்ப முயன்ற தல்வீர் பால், துர்கேஷ் குமார் இருவரும் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான தேவ்பிரகாஷ் மதுகர் மற்றும் 4 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் ஏற்கெனவே கைதாகி உள்ளனர். மதுகரிடம் நடைபெற்று வரும் விசாரணையில் பாபா பற்றி பல முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

போலே பாபாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இந்த மதுகர் உள்ளார். இதனால், மதுகரிடம் ஹாத்ரஸ் கூட்டம் சம்மந்தப்பட்ட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாபாவின் பெயரில் எந்த சொத்துக்களும் இல்லை என்றாலும் அவரது பினாமிகள் சொத்துக்கள் மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. நெரிசலுக்கு காரணமான பாபாவின் பாதுகாவலர்கள் 100 பேரின் பெயர்களும், கைப்பேசி எண்களும் சேகரிக்கப்படுகின்றன.

இந்த வழக்கு குறித்து பதிவான முதல் தகவல் அறிக்கையில் போலே பாபாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதற்கு முக்கிய காரணமாக போலே பாபாவின் உண்மையான பெயர் சூரஜ் பால் ஜாத்தவ். காஸ்கஞ்ச் மாவட்டத்தின் பட்டியாலி கிராமத்தைச் சேர்ந்த இவர், உத்தர பிரதேச காவல்துறையில் சாதாரண காவலராக இருந்தவர். கிரிமினல் வழக்கில் சிக்கி சிறை சென்றதால் பணிநீக்கம் செய்யப்பட்ட இவர், நாரயண் சாக்கா விஷ்வ ஹரி என மாறி பின்னர் பாபாவானார்.

தலித்துகளின் செல்வாக்கு மிக்க பிரிவான ஜாத்தவ் சமூகத்தை சேர்ந்த பாபா, ஒரு வாக்குவங்கியாகக் கருதப்படுகிறார். இதனால், அவர் மீது பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சிக்கவில்லை. பாபாவின் சமூகத்தவரும் தலித் ஆதரவு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியும், இடதுசாரிகளும் மட்டும் விமர்சனம் செய்துள்ளனர். இந்தச் சூழலில், வழக்கை விசாரிக்கும் அலிகர் பகுதி ஐஜியான ஷலாப் மாத்தூர், ‘தேவை ஏற்பட்டால் வரும் நாட்களில் பாபாவிடமும் விசாரணை நடத்தப்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.