ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் : உருவப்படத்துக்கு மரியாதை

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த 5-ம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீஸார் 10 தனிப்படைகளை அமைத்து துப்பு துலக்கினர். தொடர்ந்து, மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39) மற்றும் அவரது கூட்டாளிகள் 10 பேர் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு இன்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். சென்னை அயனவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு சென்று அவரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு, ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு ஆறுதல் கூறினார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வின்போது அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.