புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள் கலந்தாய்வு மூலம் கூண்டோடு இடமாறுதல் வாங்கிச் சென்றதால் நிரந்தர ஆசிரியர்களின்றி பள்ளி செயல்பட்டு வருகிறது.
கீரமங்கலம் அருகே காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் 111 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மொத்தம் ஒரு தலைமை ஆசிரியர், தலா 3 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் உள்ளது. கடந்த ஆண்டு 2 இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடம் ஏற்பட்டது.
ஒரு பட்டதாரி ஆசிரியர் மட்டும் நிர்வாக காரணத்தினால் கடந்த ஆண்டே வேறொரு பள்ளிக்கு மாற்றுப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில், இப்பள்ளியில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர் திருக்கட்டளைக்கு இடமாறுதலில் சென்று விட்டார்.
2 பட்டதாரி ஆசிரியர்களில் ஒருவர் கீழாத்தூருக்கும், மற்றொருவர் செரியலூருக்கும் இடமாறுதலில் சென்று விட்டனர். இடைநிலை ஆசிரியர் ஒருவர் செரியலூருக்கு இடமாறுதலில் சென்றுவிட்டார். இதன் மூலம் இப்பள்ளியில் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் 2 தற்காலிக ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களே வகுப்புகளை நடத்தி வருகின்றனர். ஊர் மக்கள் பள்ளியில் திரண்டனர். அப்போது, நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு இன்மையால் இடமாறுதலில் சென்றிருப்பதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.