முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக புகாரில் டெல்லி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில், மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர், உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக 2022 நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரி செய்ய குற்றப்பத்திரிகையை சிபிஐயிடம் நீதிமன்றம் திரும்ப அளித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
இது தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்த போது, இந்த வழக்கை எம்.பி., எல்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வளவன் உத்தரவிட்டுள்ளார். முன்னாள், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த வழக்கில் உள்ளதாக விசாரணையை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 2 ம் தேதி வழக்கை விசாரிக்கிறது.