“ஊழல் நிறைந்த புதுச்சேரி அரசுக்கு கூட்டணி கட்சியே முடிவு கட்டிவிடும்” – நாராயணசாமி

“ஊழல் நிறைந்த ஆட்சிக்கு கூட்டணி கட்சியே முடிவு கட்டிவிடும்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. பாஜக, சுயேட்சை மற்றும் நியமன எம்எல்ஏ-க்கள் என 7 பேர், பாஜக அமைச்சர்களை மாற்ற வேண்டும். முதல்வர் தன்னிச்சையாக செயல்படுகிறார். எங்களை கலந்தாலோசிப்பது இல்லை. ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்ற குற்றச்சாட்டுக்களை வைத்து புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசியுள்ளனர். பிறகு அவர்கள் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அமைப்புச் செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்துப் பேசி உள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம், இந்த ஆட்சியாளர்கள் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாததே. ரெஸ்டோ பார்கள் அதிகரித்துவிட்டன. மதுபான தொழிற்சாலைகளிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அனுமதி வழங்குகின்றனர்.

பொதுப்பணித்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குப்பை வாருவதில் ஊழல், சிவப்பு ரேஷன் அட்டை கொடுப்பதில் லஞ்சம், அனைத்து டெண்டர்களிலும் கமிஷன் வாங்கப்படுகிறது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை டெல்லி தலைவர்களிடம் கூறி, இந்த ஆட்சிக்கு கொடுக்கும் ஆதரவை திரும்பப்பெற வேண்டும். இல்லையென்றால் நாம் வெளியில் வந்து ஆதரவு கொடுக்க வேண்டும். முதல்வர், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக அமைச்சர்கள் ஊழலில் திளைத்துள்ளனர் என்று பகிரங்க குற்றச்சாட்டுக்களை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நான் ஊழல் குற்றச்சாட்டுக்களை கடந்த இரண்டரை ஆண்டுளாக கூறி வந்தேன். தற்போது அதை ஆளும் கட்சியில் உள்ள பாஜக, சுயேட்சை, நியமன எம்எல்ஏ-க்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இதிலிருந்து காங்கிரஸ் கட்சி கூறிய புகார்கள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவர்களே அதனை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு முதல்வர், அமைச்சர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. ஏற்கெனவே புதுச்சேரி மாநில மக்கள் இவர்களின் ஊழலை சகித்துக்கொள்ள முடியாமல் மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை 1 லட்சத்து 36 ஆயிரம் வக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளனர்.

ஊழலை முதல்வரும், அமைச்சர்களும் மூடிமறைக்க பார்க்கின்றனர். இந்த ஆட்சியில் ஊழலைத் தவிர வேறு ஒன்றும் நடைபெறவில்லை. உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் கூட அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.

கன்னியக்கோயில் பகுதியில் அவருடைய மனைவியின் பெயரில் 12 ஆயிரத்து 400 சதுரடி நிலம் வாங்கப்பட்டிருக்கிறது. அந்த நிலத்தில் பினாமியின் பெயரில் பெட்ரோல் பங்க் அமைக்கப்படுகிறது. ஆனால், அங்குள்ள சீனிவாசா கார்டன் செல்லும் வழியை ஆக்கிரமித்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த ஆட்சியாளர்கள் சொத்துக்களை அபகரிப்பதில் எப்படி முனைப்பாக இருக்கிறார்கள் என்பதற்கு இது உதாரணம்.

இதுதொடர்பாக விசாரிக்க கோரி, பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஆகியோருக்கு நான் கடிதம் எழுத உள்ளேன். கையில் அதிகாரம் இருப்பதால் மக்கள் சொத்துக்களை அபகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது யாராக இருந்தாலும், அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி. பொது வாழ்வில் இருப்பவர்கள் அரசு சொத்தை அபரிக்கக்கூடாது. பொதுப்பணித்துறை அமைச்சரின் வீடு ரூ. 2 கோடி செலவு செய்து புதுப்பிக்கப்படிருக்கிறது. இதற்கு யார் அவருக்கு அனுமதி கொடுத்தது?

இது அரசு சொத்தை கொள்ளையடிப்பதாகும். பொதுப்பணித்துறை அமைச்சர், அந்த பதவியை வைத்துக்கொண்டு சொந்த வீட்டை புனரமைப்பதை எப்படி ஏற்க முடியும். இது ஊழல் இல்லையா? ஏற்கெனவே இந்த ஆட்சியில் நாற்றம் வீசுகிறது. இன்னும் மாற்றிக்கொள்ளாமல் முதல்வர், அமைச்சர்கள் கொள்ளையடிப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள். பாஜக, சுயேட்சை, நியமன எம்எல்ஏ-க்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. இதுபோன்ற ஊழல் நிறைந்த இந்த ஆட்சிக்கு கூட்டணி கட்சியே முடிவு கட்டிவிடுவார்கள்” என்று நாராயணசாமி கூறினார்.