கூட்டுறவுத் துறையால் கோடிக்கணக்கானோர் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் : அமித் ஷா

கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கூட்டுறவுத் துறை கொண்டு வந்துள்ளது என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

102-வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு காந்திநகரில் (குஜராத்) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “2021-ஆம் ஆண்டு இந்த நாளில், பிரதமர் நரேந்திர மோடி கூட்டுறவுத் துறையை மேலும் வலுப்படுத்துவதற்காக கூட்டுறவு அமைச்சகத்தை நிறுவினார். இந்த அமைச்சகம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து இன்று வரை, ‘ஒத்துழைப்பின் மூலம் செழிப்பு’ என்ற உறுதியுடன் நாட்டின் கோடிக்கணக்கான கூட்டுறவு சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

அமைச்சகமானது கூட்டுறவுத் துறையை தொழில்நுட்பம் நிறைந்ததாக மாற்றி இருக்கிறது. அதோடு, 54க்கும் மேற்பட்ட முன்முயற்சிகள் மூலம் ஒட்டுமொத்த கூட்டுறவு அமைப்பையும் பொருளாதாரத்தின் முக்கிய பங்காளியாக மாற்றியுள்ளது. கூட்டுறவு அமைச்சகத்தை நிறுவியதன் மூலம் நாட்டின் கூட்டுறவு அமைப்புக்கு புது வாழ்வு அளித்த பிரதமருக்கு அனைத்து கூட்டுறவு சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகள், கால்நடை விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வருவாயை அதிகரிக்கச் செய்வதையும், நாட்டிற்கும் உலகிற்கும் தூய்மையான உணவு தானியங்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு கூட்டுறவு அமைச்சகம் முன்னேறி வருகிறது. வரும் ஆண்டுகளில், கூட்டுறவுத் துறை மேலும் வலுவடைந்து, வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றப் போகிறது” என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.