அசாம் வெள்ள பாதிப்பு மேலும் மோசம் : 30 மாவட்டங்களில் 24.50 லட்சம் பேர் பாதிப்பு

அசாம் வெள்ள பாதிப்புகள் சனிக்கிழமை மேலும் மோசமடைந்துள்ளது. முக்கிய நதிகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்கிற நிலையில் மாநிலத்தில் 30 மாவட்டங்களில் 24.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. 12 பேர் மின்னல் மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட திப்ருகர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு விட்டு திரும்பிய மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, நேற்று இரவில் வெள்ள நிவாரணம் குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் முதல்வர் கூறியதாவது: திப்ருகர் மாவட்டத்தில் ஆய்வு செய்து திரும்பிய பின்னர், சுகாதார நிதி உதவி திட்டமான, அசாம் ஆரோக்கியா நிதி உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி விவாதித்தோம்.

மிகவும் அரிதான சம்பவங்கள் மற்றும் வேறு எந்த திட்டத்திலும் வராதவர்களின் விண்ணப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன். பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிய பின்னர் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யும் படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எங்களைப் பொறுத்தவரை செயல்திறன் மிக்க நிர்வாகமே சிறந்த பொது சேவைக்கு முக்கியமானதாகும். சுத்தமான குடிநீர் விநியோகத்தைப் பொறுத்த வரை மாநிலம் முழுவதும் வெள்ளம் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜல் ஜீவன் திட்டம் இந்த கடினமான காலத்தில் ஒரு வெள்ளிக்கோடாக வந்துள்ளது. மாற்று குடிநீர் வழங்கல் திட்டம் இந்த இக்கட்டான நேரத்தில் சுத்தமான குடிநீர் வழங்குகிறது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

கசார், காம்ருப், கைலாகண்டி, ஹோஜை, துப்ரி, நாகோன், மோரிகன், பார்பேட்டா, திப்ருகர், நல்பாரி, திமாஜி, போங்கைகான், லக்கிம்பூர், ஜோர்கட், சோனிட்புர், கோக்ராஜ்கர், கரிம்கஞ்ச், தெற்கு சல்மாரா, தர்ராங் மற்றும் தின்சுகியா மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கை படி, வெள்ளம், மின்னல் நிலச்சரிவு போன்ற காரணங்களால் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர். 7,75,721 மக்கள் தொகை கொண்ட துப்ரி மாவட்டம், 1,86,108 மக்கள் தொகையைக் கொண்ட தர்ராங் மாவட்டம், 1,75,231 மக்கள் தொகை கச்சார், 1,39,399 மக்கள் தொகை கொண்ட பார்பேட்டா மற்றும் 1,46,045 மக்கள் தொகை கொண்ட மோரிகான் மாவட்டம் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து முதல்வர் கூறுகையில், நானும் எனது அமைச்சரவையும் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்யது, மக்களின் குறைகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க அயராது உழைத்து வருகிறோம்” என்றார்.

இதனிடையே, நிமாதிகாட், குவாஹாட்டி, கோல்பாரா மற்றும் தூப்ரி மாவட்டங்களில் பிரம்மபுத்திரா அபாய அளவவைத்தாண்டி பாய்கிறது. அதன் கிளை நதிகளும் பல்வேறு மாவட்டங்களில் அபாயக்கட்டத்தை தாண்டி ஓடுகிறது. இந்தநிலையில், வெள்ளத்தால் 225 சாலைகள், 10 பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.