“அயோத்தியில் தோற்கடித்ததைப் போல குஜராத்திலும் பாஜகவை காங்கிரஸ் தோற்கடிக்கும்” – ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தலின்போது அயோத்தியில் தோற்கடித்ததைப் போல, சட்டப்பேரவைத் தேர்தலின்போது குஜராத்தில் பாஜகவை காங்கிரஸ் தோற்கடிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் மாநாட்டில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “அவர்கள் (பாஜகவினர்) எங்களை அச்சுறுத்தி எங்கள் அலுவலகத்தை சேதப்படுத்தியதன் மூலம் எங்களுக்கு சவால் விடுத்துள்ளனர். எங்கள் அலுவலகத்தை சேதப்படுத்தியது போல் நாங்கள் ஒன்றாக சேர்ந்து அவர்களின் அரசாங்கத்தை காலி செய்வோம். நான் சொல்வதை நீங்கள் குறித்துக்கொள்ளுங்கள். மக்களவைத் தேர்தலின்போது அயோத்தியில் தோற்கடித்ததைப் போல, சட்டப்பேரவைத் தேர்தலின்போது குஜராத்தில் நரேந்திர மோடியையும், பாஜகவையும் காங்கிரஸ் தோற்கடிக்கும். அதன்மூலம், குஜராத்தில் புதிய தொடக்கத்தை காங்கிரஸ் ஏற்படுத்தும்.

அயோத்தியில் பாஜக ஏன் தோற்றது என்று நாடாளுமன்றத்தில் அயோத்தி எம்பியிடம் கேட்டேன். அப்போது அவர், ‘அயோத்தி மக்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டன. மக்களின் கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன. அவர்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை. சர்வதேச விமான நிலையம் என்ற பெயரில் விவசாயிகளின் நிலங்கள் எடுக்கப்பட்டன. அவற்றுக்கு இன்று வரை இழப்பீடு வழங்கப்படவில்லை. ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அயோத்தி மக்கள் அழைக்கப்படவில்லை. இதன் காரணமாகவே, அயோத்தி மக்கள் கோபமடைந்து பாஜகவை தோற்கடித்தனர்’ என என்னிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது, பிரதமர் மோடி அயோத்தியில் போட்டியிட விரும்பினார். அதற்காக 3 முறை கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அயோத்தியில் மோடி நின்றால் அவர் தோற்கடிக்கப்படுவார். அதன்மூலம், அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்தே, அவர் அயோத்தியில் போட்டியிடும் முடிவை அவர் கைவிட்டார்.

அயோத்தியில் பாஜக தோற்கும் என்றோ, நரேந்திர மோடி தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வாரணாசியை விட்டு வெளியேறுவார் என்றோ நீங்கள் கற்பனை செய்திருக்கிறீர்களா? அயோத்தியில் பாஜக தோற்றது போல் குஜராத்திலும் தோற்கப் போகிறது. குஜராத் மக்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. பயப்படாமல் பாஜகவை எதிர்த்துப் போராடினால் பாஜகவால் உங்கள் முன் நிற்க முடியாது.

காங்கிரஸ் கட்சி, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியது. அச்சம் வேண்டாம் என நாட்டுக்குக் கூறியது. ஆனால் ஆர்எஸ்எஸ்-பாஜக-வினர், ஆங்கிலேயர்களுடன் நின்றனர். நாங்கள் பயப்படுகிறோம் என்று கைகளைக் கூப்பினார். நமது தலைசிறந்த தலைவர் மகாத்மா காந்தி குஜராத்தைச் சேர்ந்தவர். அவர் நமக்கு வழி காட்டினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மக்களிடையே அச்சம் இருந்தது. ஆனால் காந்தி, அச்சம் கொள்ள வேண்டாம் என நாட்டு மக்களிடம் கூறினார். நரேந்திர மோடியை பாஜகவில் யாரும் விரும்பவில்லை. ஆனால் பாஜக தலைவர்களுக்கு பலம் இல்லை. அச்சம் காரணமாக அவர்களால் இதை மோடியிடம் சொல்ல முடியாது” என தெரிவித்தார்.

ஜூலை 2 அன்று அகமதாபாத்தின் பால்டி பகுதியில் உள்ள காங்கிரஸின் மாநிலத் தலைமையகமான ராஜீவ் காந்தி பவனுக்கு வெளியே பாஜகவின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள், இந்துக்கள் குறித்த ராகுல் காந்தியின் கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, காங்கிரஸ் அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது. ராகுல் காந்தி, தனது உரையின் தொடக்கத்தில் இது குறித்தே குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.