அக்னி வீரர் திட்டத்தில் இழப்பீட்டுக்கும், காப்பீட்டுக்கும் வித்தியாசம் உள்ளது மத்திய அரசு மீது ராகுல் புதிய தாக்கு

அக்னி வீரர் திட்டம் குறித்த சர்ச்சையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது புதிய தாக்குதல் தொடுத்துள்ளார். காப்பீடுக்கும், இழப்பீடுக்கும் வித்தியாசம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் இந்தியில் வெளியிட்டுள்ள வீடியோவில், அக்னி வீரர் அஜய் குமாரின் தந்தை தனது குடும்பம் ஒரு தனியார் வங்கியில் இருந்து ரூ.50 லட்சம் காப்பீடும், ராணுவக் குழு காப்பீட்டு நிதியில் இருந்து ரூ.48 லட்சமும் பெற்றதாக தெரிவிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து பேசும் ராகுல் காந்தி, அஜய் குமாரின் குடும்பத்திற்கு ஏன் அரசு சார்பில் எந்த கருணைத் தொகையும் வழங்கப்படவில்லை, அவரது வங்கிக் கணக்கில் சம்பள பாக்கிகள் ஏன் வரவு வைக்கப்படவில்லை. “நாட்டில் இரண்டு வகையான தியாகிகள் உள்ளனர். ஒன்று சாதாரண ராணுவ வீரர்கள் மற்றொன்று அக்னி வீரர்கள். இவர்களின் மரணத்துக்கு பின்னர் கிடைக்கும் நன்மைகளிலும் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன” என்று சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி அந்த ஏற்றத்தாழ்வுகளை பட்டியலிட்டு கூறுகிறார்.

இந்த வீடியோவுடன் வெளியிட்டுள்ள பதிவில், “தியாகி அஜய் குமாரின் குடும்பத்துக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை. இழப்பீட்டுக்கும் காப்பீட்டுக்கும் வித்தியாசம் உள்ளது. அஜய் குமாரின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து மட்டுமே பணம் கிடைத்துள்ளது. அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய எந்த உதவியும் அவர்கள் குடும்பம் பெறவில்லை.

நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த ஒவ்வொரு குடும்பமும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் மோடி அரசு அவர்களில் பாரபட்சம் பார்க்கிறது. அரசு என்ன சமாதானம் கூறினாலும் இது தேசத்தின் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினை. நான் இதனைத் தொடர்ந்து எழுப்புவேன். ராணுவம் பலவீனப்படுத்தப்படுவதை இந்தியா கூட்டணி அனுமதிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குறுகிய கால அடிப்படையில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அக்னி வீரர்கள் திட்டம் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் அதன் மூலம் நாடு அதன் உண்மை நிலை என்னவென்று அறிந்து கொள்ளும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மேலும் அக்னி வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் பொய் உரைத்துள்ளார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அஜய் குமார் என்ற அக்னி வீரர், கடந்த ஜன.18-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நடந்த கன்னிவெடி தாக்குதலில் உயிரிழந்தார்.