நாட்டுப்பற்றும் மொழிப் பற்றும் கொண்ட ஒரே தேசியவாதி ம.பொ.சி. ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி பேச்சு

புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தமிழாய்வுத்துறையும், புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் கொண்டாடிய, சிலம்பச்செல்வர் ம.பொ.சிவஞானம் மற்றும் ஞான பீட விருது பெற்ற அகிலன் பிறந்தநாள் விழாவில் சிறப்புரையாற்றிய ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி. ம. பொ.சி., நாட்டுப்பற்றும் மொழிப் பற்றும் கொண்ட ஒரே தேசியவாதி என்று குறிப்பிட்டார்.

இங்விழாவில் கல்லூரி பொறுப்பு முதல்வர் ச.ஞானஜோதி தலைமையுரையாற்றினார். வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன் அறிமுக உரையாற்றினார். விழாவில் சிறப்புரையாற்றிய ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி, “சிலம்புச் செல்வர்” ம.பொ.சி என்றழைக்கப்படும் ம.பொ.சிவஞானம் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டான தலைவர்.மூன்றாம் வகுப்பே பயின்ற அவர் பத்திரிக்கையில் அச்சுக் கோப்பவராக பணியைத் தொடங்கி தேசியவாதியாகவும் மொழிக் காப்பாளராகவும் உயர்ந்தவர். ஏழையாக பிறந்து குடியரசு தலைவர் பதவிக்கு உயர்ந்த ஆபிரகாம் லிங்கன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப்படித்தது ம.பொ.சி.யின் வாழ்க்கையை மாற்றியது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் படித்தார். சுயமாகப் படித்து தன்னை மேன்மை படுத்திக் கொண்டார், காந்தியின் மீது பற்று கொண்டவர். அவரின் தலைமையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். அதே போல் தாய்மொழியான தமிழின் மீதும் பற்று கொண்டவர். சுதந்திரப் போராட்ட காலத்தில் நாட்டு மற்றும் மொழிப் பற்றும் கொண்ட தேசியவாதியாக விளங்கிய ஒரே தலைவர் ம.பொ.சியே.

மதுவிலக்கு போராட்டத்திலும் முன்னின்றவர். சுதந்திரத்திற்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் உருவாகியபோது, திருத்தனியும், சென்னையும் தமிழகத்துடன் இருக்க காரணமாக இருந்தவர், மீட்டெடுத்தவர் இவரே. “தமிழைக் காப்போம், தலைநகரைக் காப்போம். தலைநகரைக் காக்க தலையைக் கொடுப்போம் என்ற கோஷத்தோடு எல்லைப் போராட்டம் நடத்தியவர். ம.பொ.சி.யின் மிகப்பெரிய சாதனை வீரப்பாண்டிய கட்டப்பொம்மனையும், செக்கிலுத்த செம்மல் வ.உ.சிதம்பரானரையும் தமிழ் கூறும் நல்லுலகம் அறியச் செய்தது. அதே போல், இந்திய சுதந்திரப் போராட்டதில் தமிழகம் ஆற்றிய பணியினை “விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு ” என்ற நூலின் வழியும்,  “எனது போராட்டம்” நூலின் வழியும் அறியச் செய்தது. இந்த இரண்டு நூலையும் நீங்கள் எல்லோரும், உங்களிடம் தேசப்பற்றும் மொழிப் பற்றும் உருவாக,அவசியம் வாசிக்க வேண்டும்.

89 ஆண்டுகள் வாழ்ந்த ம.பொ.சி. 50 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் இருந்திருக்கிறார். தன் தேசத்தின் சுதந்திரத்திற்காகவும், தன் மொழி மீட்டெடுப்பிற்காகவும் பெரும் போராட்டங்களை முன் எடுத்தவர். சிறை சென்றவர். நீங்கள் ஒவ்வொருவரும் ம.பொ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை அவசியம் அறிய வேண்டும். அவரின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்க வேண்டும் ” என்று மாணவிகளைக் கேட்டுக் கொண்டார்.

விழாவில்,முன்னதாக அகிலன் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடிய புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவை நிறுவனர் மாரிமுத்து அகிலனின் பெருமைகளை எடுத்துரைத்தார். ” கதைகள் ஏன் வாசிக்க வேண்டும்?” என்ற தலைப்பில் ரோட்டரி முன்னாள் ஆளுனர் அ.லெ. சொக்கலிங்கம் உரையாற்றினார். தொடக்கத்தில், தமிழ்த் துறைத் தலைவர் மா.சாந்தி விழாவிற்கு வந்திருந்தோர் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக தமிழ்த்துறைப் பேராசிரியர் க.யோகாம்பாள் நன்றி கூறினார். விழாவில் புலவர் மதிவாணன், வாசகர் பேரவை உறுப்பினர்கள் சிறுகதை ஆசிரியர் சத்திய ராம்  ராமுக்கண்ணு, மத்தியாஸ், பொறியாளர் கண்ணன் மற்றும் ஏராளமான பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.