கடந்த 18 மாதங்களாக வழங்கப்படாத ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்கக் கோரி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2022-ம் ஆண்டு நவம்பர் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை போன்றவை இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.
அவற்றை உடனடியாக வழங்க வேண்டும், 2015-ம் நவம்பர் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைகளை வழங்க வேண்டும் என்பன உள்பட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளிகள் அவர்களது சங்க அலுவலகத்தில் இன்று ஒன்றுகூடினர். பின்னர் அங்கிருந்து பல்லவன் இல்லம் வரை ஊர்வலமாக வந்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அதையடுத்து பல்லவன் இல்லம் அருகில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசையும், போக்குவரத்து துறை அமைச்சரையும் கண்டித்து முழக்கமிட்டனர்.
பின்னர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே.வீரராகவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் கடந்த 2022 நவம்பர் முதல் வழங்கப்படவில்லை.
ஓய்வுபெற்ற 88 ஆயிரம் பேரில் 33 ஆயிரம் பேர் 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே ஓய்வூதியம் பெறுகின்றனர். அதனால் அவர்களது வாழ்வாதாரம் பெரும் சவாலாக உள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது.
இருப்பினும், அரசு எங்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் இழுத்தடிக்கிறது. எங்கள் பிரச்சினை தீரும் வரை போராட்டம் தொடரும். இதற்காக பெரிய இயக்கம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இது குறித்து விரைவில் கூடவிருக்கும் எங்கள் அமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்படும்” என்றார்.