“முதல்வர் ரங்கசாமி, ஜனநாயக முறைப்படி மனசாட்சியோடு சிந்தித்து தங்கள் கட்சியினுடைய 10 எம்எல்ஏ-க்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மீண்டும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க முன்வர வேண்டும். அப்போது தான் குறுக்கு வழியில் வேறு கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்படும்” என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியில் பாஜகவினரால் கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக உச்சகட்ட மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
6 பாஜக எம்எல்ஏக்களில் 2 பேர் அமைச்சர்களாகவும், ஒருவர் சட்டப் பேரவைத் தலைவராகவும் பதவிகளை வகித்துக் கொண்டிருக்கின்றனர். பதவியில் இல்லாத ஒரு சில பாஜக எம்எல்ஏ-க்கள், நியமன எம்எல்ஏ-க்கள், பாஜகவுக்கு ஆதரவு என அவர்களாகவே தெரிவித்துள்ள சில சுயேட்சை எம்எல்ஏ-க்கள் முதல்வர் மீதும், உள்துறை அமைச்சர் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு சுழற்சி முறையில் அமைச்சரவையை மாற்ற வேண்டும் என துணை நிலை ஆளுநர் ராதாகிருஷ்ணனை சந்தித்து மனு அளித்துள்ளனர். ஏற்கெனவே துணைநிலை ஆளுநர் அலுவலகம் என்பது பாஜக கட்சி அலுவலகமாகவே இருக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதத்தில் பாஜக எம்எல்ஏ-க்களுடைய செயல்பாடுகள் அமைந்துள்ளது.
ஆளுநரிடம் தெரிவித்த அதே கருத்துகளை அவர்கள் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்தித்து தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் கடந்த மூன்று ஆண்டு காலமாக இந்த அரசு ஆட்சியில் அமைந்ததிலிருந்து ஆட்சியில் அங்கம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கட்சிகளிடையே ஒரு இணக்கமான சூழ்நிலை உருவானதாக தெரியவில்லை.
ஒவ்வொரு முறை சட்டப்பேரவை கூடும்போதும் சுயேட்சை எம்எல்ஏ-க்கள் மற்றும் பாஜகவின் ஒரு சில எம்எல்ஏ-க்கள் ஆளுங்கட்சியின் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி அரசுக்கு ஒரு தர்ம சங்கடத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் அரசு நிர்வாகமே முழுமையாக ஸ்தம்பித்துள்ளது.
ஏற்கெனவே மக்கள் விரோத ஆட்சி நடத்திய திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்பி அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆகியோருக்கு வெற்றி வாய்ப்பு வழங்கினர். ஆனாலும் மக்கள் நலத்திட்டங்களை பூர்த்தி செய்யும் செயல்பாடு புதிய அரசிடம் இல்லை. மக்கள் நலத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சி இருந்தும் மத்திய அரசால் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது கூடவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஆளும் அரசால் முழுமையாக நடத்த முடியுமா என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, முதல்வர் ரங்கசாமி, ஜனநாயக முறைப்படி மனசாட்சியோடு சிந்தித்து தங்கள் கட்சியினுடைய 10 எம்எல்ஏ-க்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மீண்டும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க முன்வர வேண்டும். அப்போது தான் குறுக்கு வழியில் வேறு கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்படும் என்று அன்பழகன் தெரிவித்தார்.