‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ், அரசு நலத்திட்டங்களில் பயன்பெற்ற பயனாளிகளிடம், திட்டங்கள் குறித்த கருத்துக்கள், பின்னோட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேட்டறிந்தார்.
தமிழக மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், ‘நீங்கள் நலமா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண், முதல்வரின் காலை உணவு, கலைஞர் மகளிர் உரிமை, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், ஒலிம்பிக் தேடல், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதல்வர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதல்வர் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் 1.15 கோடி பெண்கள் மாதம்தோறும் ரூ.1,000 உரிமை தொகை பெறுகின்றனர். விடியல் பயண திட்டத்தில் பெண்கள் 445 கோடி முறை பயணித்து மாதம் ரூ.888 வரை சேமிக்கின்றனர்.
ஒரு கோடி பேர், ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்திலும், 16 லட்சம் மாணவர்கள் காலை உணவு திட்டத்திலும், புதுமைப்பெண் திட்டத்தில் 4.81 லட்சம் மாணவிகள் மாதம் ரூ.1,000 பெற்றும் பயனடைகின்றனர்.நான் முதல்வன் திட்டத்தில் 28 லட்சம் இளைஞர்கள், இல்லம் தேடி கல்வியில் 24.86 லட்சம் பள்ளிக் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். புதிய குடிநீர் இணைப்பை 62.40 லட்சம் பேர், புதிய இலவச மின் இணைப்பை 2 லட்சம் பேர், உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 30 லட்சம் முதியோர், 5 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பெறுகின்றனர்.
இவ்வாறு பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளை தொடர்பு கொண்டு அரசு நலத்திட்டங்கள் குறித்து, முதல்வரின் முகவரி துறையின் கீழ் வரும் ‘நீங்கள் நலமா’ திட்டத்தில் வீடியோ கால் வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேட்டறிந்தார். குறிப்பாக, திட்டங்களின் பயன், பின்னோட்டங்களையும் அவர் பயனாளிகளிடம் விசாரித்து அறிந்தார். இந்த நிகழ்வில், முதல்வரின் செயலர் நா.முருகானந்தம், முதல்வரின் முகவரி துறை சிறப்பு அலுவலர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.