நீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் பொய் சொல்வதை தவிர்க்க வேண்டும் என தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த பிரச்சினையை முன்வைத்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மத்திய அரசை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்புவதாக எதிர்க்கட்சிகளை மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- கடந்த கால மற்றும் நிகழ்கால பிரச்சினைகளில் நாட்டை ஏமாற்றிய வரலாறு காங்கிரசுக்கு உண்டு. அவர்களின் இந்த எண்ணம் நீட் விவகாரத்திலும் வெளியில் வந்துள்ளது. பொய்கள் மற்றும் வதந்திகளின் உதவியுடன் பிரச்சினைகளில் இருந்து விலகி நிலையற்ற தன்மையை உருவாக்கும் இந்தியா கூட்டணியின் நோக்கம் தேசநலன் மற்றும் மாணவர்களுக்கு எதிரானது,நாட்டின் இளைஞர்கள் மற்றும் இளைஞர் சக்திக்கும், அவர்களது எதிர்காலத்துக்கும் அரசு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய உரையில் மீண்டும் உறுதிபட தெரிவித்து இருக்கிறார்.
மேலும் ஒவ்வொரு மாணவருடனும் அரசு துணை நிற்பதாக அவர் உறுதியளித்து இருக்கிறார். மாணவர்களுக்கு ஒருபோதும் அநீதி ஏற்பட அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். நீட் முறைகேடு பிரச்சினையில் ஒரு சட்டம் மூலம் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து இருக்கிறது. தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பமாட்டார்கள் என்று நாடு நம்புகிறது. எனவே நீட் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் தங்களின் தவறான ஏமாற்றுக் கொள்கையை கைவிட வேண்டும். பொய்யான தகவல்களை கூறி மாணவர்களையும், பெற்றோரையும் திசை திருப்புவதை நிறுத்த வேண்டும்” என்று தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.