புதுக்கோட்டையில் சட்ட உதவி முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது பெண்கள் பயப்படாமல் புகார் அளிக்க நீதிபதி வேண்டுகோள்

புதுக்கோட்டை எழில் நகரில் உள்ள தாஜ் ஹாலில் சட்ட உதவி முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி டிடிஹெச் ரோஸ் நிறுவனம் இணைந்து நடத்தியது.  நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் செயலாளரும் நீதிபதியும்மான ராஜேந்திரகண்ணன் தலைமை தாங்கினார் . மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் தலைவர் சதாசிவம் முன்னிலை வகித்தார்.சட்ட உதவி முகாம் விழிப்புணர்வு நோக்கம் குறித்து ரோஸ் நிறுவன இயக்குனர் ஆதப்பன் பேசினார்.

நிகழ்ச்சியில் தலைமை ஏற்று பேசிய நீதிபதி ராஜேந்திரகண்ணன் தற்போது சைபர்கிரைம் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் கொடுக்க வேண்டும் . அவ்வாறு புகார் கொடுக்கும் பொழுது உங்களுடைய பெயர் விலாசம் மற்றும் அடையாளங்கள் பாதுகாக்கப்படும். எந்த சூழ்நிலையிலும் செய்தித்தாள்களிலோ தொலைக்காட்சியிலோ செய்தியாக வர வாய்ப்பு இல்லை. நாட்டில் மது போதை கஞ்சா ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும். பள்ளி கூடங்கள் அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது . அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கஞ்சா, மது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, குழந்தைகளுக்கான எதிரான வன்கொடுமை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். சமுதாயத்தில் பெண்கள் தைரியமாக நடமாட  பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் . சட்ட உதவி தேவைப்படும் பெண்களுக்கு சட்டப் பணிகள் ஆணை குழு மூலம் உதவி செய்ய தயாராக உள்ளோம். எங்களிடம் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தாங்கள் அளிக்கும் புகாரில் போலீஸ் எடுத்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லை எனில் சட்டப் பணிகள்   ஆணைகுழு மூலம்  நீதிமன்றத்தில் தனி புகார் அளிக்கலாம்.

கிராமப்புறத்தில் உள்ள பெண்கள் அல்லது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு இழப்பீடு வழங்க சட்டத்தில் வாய்ப்பு உள்ளது.  நீங்கள் இழப்பீடு பெற விரும்பினால் முறைப்படி காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் . பதிவு செய்த பிறகு கோர்ட்டுக்கு  வழக்கு வரும்பொழுது நிச்சயம் இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்ட நபருக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு நடத்த வசதி இல்லை என இந்திய குடிமகன் எவரும் தனக்காக சட்டம் அளித்த உரிமையை விட்டு கொடுக்கக் கூடாது .அனைவருக்கும் சட்டப்படி சமநீதி கிடைக்க வேண்டும் என்பதே சட்டப் பணிகள் ஆணைய குழுவின் முக்கிய நோக்கம். பெண்களின் போட்டோக்களை மார்பிங் செய்து வெளியிடுகின்றனர் .இது தடுக்கப்பட வேண்டும் அதற்கு பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் . குழந்தை திருமணம் தடுக்கப்பட வேண்டும், குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் வைரம்  ரோஸ் தொண்டு நிறுவனம் பஞ்சாலை தொழிலாளர்களுக்காக பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகிறது .அதன் ஒரு பகுதியாக பஞ்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக சட்ட விழிப்புணர்வு பயிற்சி ஏற்பாடு செய்துள்ளனர். பொதுமக்கள் அனைவரும் உங்களுடைய செல்போனில் காவலர் ஆப் டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும். போக்சோ வழக்கு விசாரணை ஒரு வருடத்திற்குள் முடிந்து விடும். பெண்களுக்கு நடைபெறும் பாலியல் பிரச்சனைகளை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்  மேலும் அவர் பேசுகையில் 18 வயது நிரம்பாத அனைவரும் குழந்தைகள் தான் ஆதலால் குழந்தைகள் சொல்வதை பெற்றோர்கள் பொறுமையாக கேட்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு உள்ள பிரச்சனையை உங்களிடம்  சொல்வார்கள்.

பெண்  கல்வியின் அவசியம் பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டங்கள் குறித்தும் போக்ஸோ, போஸ் ஆக்ட் போன்ற சட்டங்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார்.   சட்ட உதவி முகாமில் பி.எம்.எஸ்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் லூர்துமேரி, வழக்கறிஞரும் மாவட்ட குழந்தைகள் நலக் குழும உறுப்பினருமான நளினி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு பாலாஜி , மெய்யம்மாள் உள்ளிட்ட பலர் பேசினார்கள். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் அரிமளம் குன்னண்டார்கோவில் பொன்னமராவதி ஆகிய ஒன்றியங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்  முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் ரோஸ்  நிறுவன இணை இயக்குனர் அகிலா வரவேற்றார். முடிவில் ஜீவானந்தம் நன்றி கூறினார்.