நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் சைபர் க்ரைம் மோசடி சார்ந்து சுமார் 10,000 முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளது தெலங்கானா மாநிலம்.
நாடு முழுவதும் சுமார் 77,000 சைபர் குற்றங்களில் தொடர்புடைய 671 குற்றவாளிகளை அந்த மாநில சைபர் செக்யூரிட்டி பிரிவு அடையாளம் கண்டுள்ளது. மேலும், அது குறித்த தகவலை அந்தந்த மாநிலத்துடன் பகிர்ந்துள்ளது. மாதந்தோறும் சைபர் க்ரைம் தொடர்புடைய வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இதுவரை சைபர் குற்ற ஆசாமிகளின் வசம் மக்கள் இழந்த ரூ.263 கோடியை அந்த மாநிலம் முடக்கியுள்ளது. மேலும், 36,749 சிம் கார்டுகள், 8,300 ஐஎம்இஐ-கள், 2,300 யுஆர்எல் மற்றும் செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களிடம் பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இதனை அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலும் நிதி ஆதாயம் சார்ந்தே இந்த குற்றங்களை குற்ற ஆசாமிகள் செய்கின்றனர். இதற்காக மக்களை ஏமாற்ற பல்வேறு யுக்திகளை அவர்கள் பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.