சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன கொடியேற்றம் : பக்தர்கள் சாமி தரிசனம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ கொடியேற்றம் கோயிலில் சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் இன்று காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடைபெற்றது. உற்சவ ஆச்சாரியார் சிவ கு.த.கு.கிருஷ்ண சாமி தீட்சிதர் கொடி ஏற்றினார்.

அதன் பிறகு, பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து ஜூலை 4- ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் சாமி வீதி உலா, 5-ம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்தில் சாமி வீதி உலா, 6-ம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் சாமி வீதி உலா, 7-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா (தெருவடைச்சான்), 8-ம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் சாமி வீதி உலா, 9 – ம் தேதி தங்க கைலாச வாகனத்தில் சாமிவீதி உலா, 10-ம் தேதி தங்கரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறும்.

தொடர்ந்து, ஜூலை 11-ம் தேதி தேர்த் திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமன் நடராஜமூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறும். ஜூலை 12-ம் தேதி சூரிய உதயத்துக்கு முன்பு, அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவ காமசுந்தரி சமேத ஸ்ரீமன்நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும்.

அதன்பிறகு, காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பிறகு, பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேசமும் நடைபெறும். ஜூலை 13ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலர் உ.வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலர் து.ந.சுந்தரதாண்டவ தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.