மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் சார்பில் செந்தமிழ் கல்லூரி வைரவிழா அரங்கில் காவியப் புலவர் புதுகை வெற்றி வேலன் எழுதிய “வேலு நாச்சியார் காவியம்” நூல் அறிமுக விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், “வேலு நாச்சியார் காவியம்” நூலை அறிமுகம் செய்து பேசுவையில், இன்றைய இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள் வீரமங்கை வேலு நாச்சியாரின் தியாகத்தையும், வாழ்க்கை வரலாற்றையும் அறிந்திட வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் வேலு நாச்சியார். பெண்கள் கல்வி அறிவு, சுதந்திரம் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த அந்த காலத்தில் ஆங்கிலேயரை எதிர்ப்பதற்கு அனைத்து சாதியினரையும் உள்ளடக்கிய ஒரு பெரிய படை தயார் செய்து மிகுந்த வீரத்துடன் போர் செய்து அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றார். அப்போது இந்தியாவில் உள்ள சமஸ்தானங்களிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்ற முதல் பெண்மணி ராணி வேலு நாச்சியார். தற்போது உள்ள இளைஞர்கள் மாணவர்கள் ராணி வேலுநாச்சியாரின் வீர தீரத்தையும், தியாகத்தையும், வாழ்க்கை வரலாற்றையும் நூலாசிரியர் புதுகை வெற்றிவேலன் எளிய தமிழில் எழுதியுள்ள “வேலு நாச்சியார் காவியம்“ என்ற இந்த நூலை வாங்கி படித்து மறைக்கப்பட்ட இந்த வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய மூத்த வழக்கறிஞர் சொ.அருள் வடிவேல் என்ற சேகர் மற்றும் நூலாசிரியர் புதுகை வெற்றி வேலன் ஆகியோர் வேலு நாச்சியாரின் தியாகத்தையும், வரலாற்றையும் எடுத்துக் கூறினர்.
இவ்விழாவில் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.எம்.நாகேந்திர சேதுபதி, சென்னை கூடுதல் காவல் துறை இயக்குனர் வே.வனிதா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி சித்தன், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன், முன்னாள் வேளாண் விற்பனை வாரிய தலைவர் அக்ரி கே.பி.டி.கணேசன், நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் ச.மாரியப்ப முரளி, காந்திய சிந்தனை பேராசிரியர் டாக்டர் சப்ராபீவி அல்அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் வந்திருந்த அனைவருக்கும் செந்தமிழ் கல்லூரி முதல்வர் ஜெ.போ.சாந்திதேவி நன்றி கூறினார்.