கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீபாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை தாங்கினார். நிர்வாக அறங்காவலர்கள் சி.சரவணன், டி.அருள்சாமி, அ.கிருஷ்ணமூர்த்தி, கே.கான்அப்துல் கபார் கான், ஆர்.நவநீதராஜன், ஹெச்.அப்துல் ஜபார் இயக்குநர் முனைவர் மா.குமுதா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். கவிஞர் தங்கம்மூர்த்தி தொடக்கவுரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக தொலைக்காட்சி பட்டிமன்ற பேச்சாளர் இராஜபாளையம் கவிதா ஜவகர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தும், மாணவிகளுக்கு புத்தகங்களையும் வழங்கி பேசியது-
பள்ளிச் சீருடைக்கும், இரட்டை ஜடைக்கும் குட்பாய் சொல்லவிட்டு, வண்ண, வண்ணமாய் மின்னும் கலர் கூடிதாருடன், இந்த கல்லூரியில் உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு தயாராகி விட்டுள்ளீர்கள். எங்களுடைய வயதைவிட உங்கள் வயதில் அதிகமான அறிவு இருக்கிறது. ஆனால் அதிகரித்துள்ள அந்த அறிவால் இப்போது பெரிய பிரச்னை உருவெடுத்துள்து, காரணம் என்னவென்றால், அந்த அறிவை நல்ல விதமாக பயன்படுத்த வேண்டும். திசைதெரியாமல் நீ செல்லும் போது, உன் பெற்றோர் இந்த பாதை சரியில்லை என்பார்கள். ஆனால் நீயோ. நீ சும்மா இரு. நான் படித்துள்ளேன். என்னால் எதையும் முடிவெடுக்கும் திறன் உள்ளது. இப்படி அவர்களின் வார்த்தைகளை கேட்காமலும். மரியாதை கொடுக்காமலும் செல்லுகின்ற போது அந்த அறிவு எதற்கும் பயணில்லாமல் போய் விடுகிறது.
உங்களுடைய கனவுகளை பொய்யாக்கி, சாதனையை முறியடிப்பதற்கு கூட்டம் ஒன்று வெளியே திரிந்து கொண்டிருக்கிறது. அந்த கூட்டத்தை கண்டு கொள்ளாமல் பயணிப்பதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த உலகம் பெண்களை சோதித்துக் கொண்டே இருக்கும். ஆனால் நாம் செல்லுகின்ற பாதையில் நேர்மை, ஒழுக்கம். உண்மை இந்த மூன்றும் ஒன்றாக இருந்தால் நம்மை யாரும் சீண்டவும் முடியாது, எதிர்க்கவும் முடியாது. நிறைய ஆண்கள் பெண்ணாக பிறக்க வேண்டும் என்று புகழ்ந்து பேசலாம். ஆனால் அதில் உள்ள கஷ்டங்கள் நமக்குத் தான் தெரியும்.
பெண்களாகிய நீங்கள் அணிகிற லெகின் ஆடை என்பது இன்றைக்கு புதிது என்று கூட நினைக்கலாம். ஆனால் 30,40ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திகில் திரைப்படங்களில் அந்த ஆடையை பேய் போட்டிருக்கும். அதுபோல இன்று உங்களுக்கு புதிதாக தெரிகின்ற ஒவ்வொரு செயலும், விஷயங்களும் நமது முன்னோர்களிடம் இருந்துள்ளது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. எப்போதும் பெண் குழந்தைகளின் பார்வை என்பது சமூகம் சார்ந்ததாக இருப்பதை நான் பல இடங்களில் கவனித்துள்ளேன்.
குறிப்பாக, அண்மையில் ஒரு ஆய்வை முதியோர் இல்லங்களில் நடத்தினர். அதில் இரண்டு பெண் குழந்தைகளை பெற்றவர்களை விட, இரண்டு ஆண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் தான் அதிகளவில் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ஆகவே நமக்கு பாசம், பணிவு, கல்வி இந்த மூன்றும் நம்மோடு தொடர்ந்து பயணித்தால், நம் வெற்றியின் என்பது தொடரும் என்றார். நிகழ்ச்சியின் முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் செ.கவிதா வரவேற்றார், முடிவில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ச.கஜலெட்சுமி நன்றி கூறினார்.