கடலூரில் அதிமுக நிர்வாகி நடுரோட்டில் வெட்டிப் படுகொலை – குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

கடலூரில் அதிமுக நிர்வாகி நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடலூர் வண்டிப்பாளையம் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பநாதன் (45). முன்னாள் கவுன்சிலரான புஷ்பநாதன், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு புஷ்பநாதன் புதுவண்டிப்பாளையம் சூரசம்ஹார தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம கும்பல் ஒன்று புஷ்பநாதனை வழிமறித்து ஓட ஓட சரமாரியாக அரிவாளால் நடுரோட்டில் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த புஷ்பநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்த தகவல் அறிந்த கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். உயிரிழந்த புஷ்பநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கடலூா் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அவரை கொலை செய்தவர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் விரைவில் பிடித்து விடுவோம் என்று தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.