சிவகங்கை அருகே வெடிகுண்டு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள் வெடித்ததில் வீடு சிதறியது. இது தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு பகுதியில் உள்ள ஓட்டு வீட்டில் இன்று திடீரென பலத்த சத்தம் கேட்டது. இதில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். டிஎஸ்பி சிபிசாய் சவுந்தரயன், இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டி, எஸ்ஐ ஹரிகிருஷ்ணன் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இதில் வெடிகுண்டு தயாரிக்க வைத்திருந்த மூலப் பொருட்கள் வெப்பத்தில் வெடித்தது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்குமார் அளித்த புகாரின் பேரில், சிவகங்கை நகர் போலீஸார் வழக்கு பதிந்து அரசனேரி கீழமேடு பகுதியைச் சேர்ந்த அரவிந்தனை (30) கைது செய்தனர். மேலும் இவர் மீது கொலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வெடிகுண்டு தயாரித்தது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.