விருதுநகர் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் இந்தப் பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலையில் உற்பத்தி தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று அறைகள் இடிந்து சேதமடைந்தன. அந்த அறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த பட்டாசு தொழிலாளர்கள் 4 பேர் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.