பிஹாரின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. பிஹார் முதல்வரும், கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், மூத்த தலைவர்கள் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங், அசோக் சவுத்ரி, தேவேஷ் சந்திர தாக்கூர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமிக்கப்பட்டார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சஞ்சய் ஜா, நிதிஷ் குமாருக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். பாஜகவில் இருந்த சஞ்சய் ஜா, 2012-ல் ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்தார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தர்பங்கா தொகுதியில் போட்டியிட்ட சஞ்சய் ஜா, அதில் தோல்வியடைந்தார். பின்னர், அவர் பிஹார் சட்ட மேலவைக்கு தேர்வுசெய்யப்பட்டு, நிதிஷ் குமார் தலைமையிலான அரசாங்கங்களில் மூன்று முறை நீர்வளத்துறை அமைச்சராக பணியாற்றினார். மிதிலாஞ்சல் பகுதியில் உள்ள மதுபானி மாவட்டத்தின் ஜாஞ்சர்பூரைச் சேர்ந்த சஞ்சய் ஜா, ஐக்கிய ஜனதா தளத்தின் உயர் சாதி முகமாக அறியப்படுகிறார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ஜா, “கட்சியின் செயல் தலைவராக நியமித்ததன் மூலம் கட்சித் தலைவர் (நிதிஷ் குமார்) மிகப் பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துள்ளார். நான் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டணி கட்சியான பாஜகவுடன் இணைந்து மேலும் ஒருங்கிணைப்புடன் செயல்பட முயல்வோம். நிதிஷ் குமார் பிஹாரில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். கடந்த 19 ஆண்டுகளாக பிஹாரின் முதல்வராக நிதிஷ் குமார் இருக்கிறார். மாநிலம் அடைந்துள்ள அனைத்து நன்மைகளுக்கும் அவர்தான் காரணம்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் எங்கள் கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 177 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். 2025ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். 19 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதிலும் நிதிஷ் குமாருக்கு எதிராக மாநிலத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதை உணர்த்தி உள்ளன” என்று தெரிவித்தார்.
கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த தலைவர் கே.சி. தியாகி, “பிஹாரில் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்பதை முதல்வர் நிதிஷ் குமார் அவையில் அறிவித்தார். மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ஜா தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிஹாருக்கு சிறப்பு பொருளாதார அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என தெரிவித்தார்.