அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உதயநத்தம் கிராமத்தில் குடி தண்ணீர் கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உதயநத்தம் கிராமத்தில் உள்ள வடக்குத் தெரு, தெற்குத் தெரு, மெயின் ரோட்டுத் தெரு, புதுத்தெரு பஜனமடத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு ஊராட்சி சார்பில் கீழத்தெரு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அந்த ஆழ்துளை கிணறு கடந்த 10 மாதத்துக்கு முன்பு பழுதானது. இதனால் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
அந்த ஆழ்துளை கிணறும் தற்பொழுது பழுதாகிவிட்டதால் சில மாதங்களாக இப்பகுதி மக்களுக்கு சரிவர குடிநீர் கிடைக்கவில்லை. அதனால் இவர்கள் சற்று தொலைவில் உள்ள ஐயப்பன் தெருவுக்குச் சென்று குடி தண்ணீர் எடுத்து வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தண்ணீர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தவித்துப் போன அப்பகுதி பெண்கள் இன்று காலையில் உதயநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரே சிலால் – அணைக்கரை மெயின் ரோட்டில் காலிக் குடங்களுடன் சென்று அரசு பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த மறியலில் ஈடுபட்டுள்ளதால் சிலால் – அணைக்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் அந்தப் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அந்தப் பெண்கள் பிடிவாதமாக காலிக் குடங்களுடன் சாலை நடுவே அமர்ந்துகொண்டு, உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என கூறினர்.
இது குறித்து பேசிய அப்பெண்கள், “கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் சரிவர வராமலும் சில சமயத்தில் தண்ணீர் கலங்களாகவும் வந்தது. இப்போது அதுவும் வராமல் போய் குடி தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று தலையிலும் இடுப்பிலும் தண்ணீர் சுமந்து வருகிறோம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு புதிதாக ஆள்துளை கிணறு அமைப்பது தான்” என்றனர்.