ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதற்கு ஈடுபடுத்தப்பட்ட 8 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இவர்களை பணிக்கு அமர்த்திய படகுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான மானிய டீசல், மீன்பிடி அனுமதி டோக்கன் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். இதில் மீன்பிடித் தொழிலில் சிறார்கள் ஈடுபடுத்தப்படுவதும், எல்லை தாண்டி மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையினரால் அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இந்நிலையில், மீன்வளத் துறை, தொழிலாளர் நல வாரியம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலக அலுவலர்கள் கூட்டாக இன்று ராமேசுவரம் மீன் பிடித்து துறைமுகத்தில் சோதனை நடத்தினர். சோதனையின்போது, மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பிய எட்டு விசைப்படகுகளில் 8 சிறுவர்கள் மீன்பிடித்தொழிலில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, 8 சிறுவர்களும் மீட்கப்பட்டு இனிமேல் மீன் பிடி தொழிலுக்கு வரக்கூடாது என எச்சரிக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்குச் செல்லுமாறு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், சிறுவர்களை மீன்பிடி தொழிலில் பயன்படுத்திய விசைப்படகின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான மானிய டீசல், மீன்பிடி அனுமதி டோக்கனும் ரத்து செய்யப்பட்டது.