தமிழகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித் துறை மற்றும் ஜிஎஸ்டி விசாரணை குழுவுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி இருந்த நிலையில், தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கும் (டிஜிபி) அமலாக்கத் துறை மணல் குவாரி முறைகேடு குறித்து ஆதாரத்துடன் கடிதம் மூலம் தகவல் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்ட விரோதமாக மணல் விற்பனை செய்வதாகவும், அதன் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறைக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சை, வேலூர், புதுக்கோட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மணல் குவாரிகள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், இடைத்தரகர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
மணல் குவாரிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு காட்சிகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மணல் குவாரிகளில் சேமித்து வைத்திருந்த மணல் அளவு, விற்பனை செய்யப்பட்ட அளவு குறித்தும் கணக்கெடுக்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாது ஐஐடி கான்பூர் நிபுணத்துவத்தை பயன்படுத்தி அனைத்து மணல் அகழ்வு தளங்களிலும் தொழில்நுட்ப ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், மாவட்ட கலெக்டர்கள் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள், அதிகாரிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவர்களது அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரித்தனர். அவர்கள் அளித்த பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதும், பினாமி பெயர்களில் சில ஆவணங்கள் இருந்ததும், போலி பில்கள் மூலம் மணல் விற்பனை செய்து ஜி.எஸ்.டிக்கு வரி இழப்பை ஏற்படுத்தி இருந்ததும் கண்டறியப்பட்டது. மொத்தம் சுமார் ரூ.4,730 கோடி அளவுக்கு மணல் விற்பனை நடைபெற்றிருந்த நிலையில் கணக்கு புத்தகத்தில் வருவாய் ரூ.36.45 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் மணல் குவாரி முறைகேடு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், இந்த முறைகேட்டில் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்துள்ள காரணத்தால் இதுபற்றி முழுமையாக விசாரிக்குமாறு வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி. விசாரணை குழுவுக்கு அமலாக்கத் துறை அண்மையில் கடிதம் எழுதி இருந்தது. இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கும் அமலாக்கத் துறை கடிதம் எழுதி உள்ளது. அதில் தமிழகத்தில் 23 லட்சம் யூனிட் மணல் சட்ட விரோதமாக எடுத்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆதரங்களுடன் குறிப்பிட்டுள்ளனர்.