திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் : சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகமும், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையமும் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார்.

இது குறித்து அவர் சட்டசபையில் பேசியதாவது : தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கும், தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கப் போகும் மாபெரும் அறிவிப்பு ஒன்றையும், தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப் போகும் அறிவுலகம் வரவேற்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வருகிறது. அதில் மிக முக்கியமானது பெருந்தொழில்கள். வளர்ச்சிமிகு தமிழ்நாடாகவும், அமைதிமிகு தமிழ்நாடாகவும் இருப்பதால், தமிழ்நாட்டை நோக்கிப் பல்வேறு நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருந்து தொழில் தொடங்குவதற்கு வந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்தத் தொழில் நிறுவனங்கள் மூலமாகத் தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சி அடைகிறது என்பது மட்டுமல்ல; தமிழ்நாட்டின் இளைய சக்தியான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

2022 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு ‘நம்பர்-1’ மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது. மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. இத்தொழில் வளர்ச்சிக்கான மாநிலங்களின் தரவரிசையில், 2020 ஆம் ஆண்டில் கடைசி நிலையில் இருந்த தமிழ்நாடு, தற்போது சிறந்த செயற்பாட்டாளர் அந்தஸ்தைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030 ஆம் ஆண்டிற்குள் ‘ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக’ உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காக, தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து வருவதை இதன் மூலம் அறியலாம்.

அனைத்து மாவட்டங்களிலும் தொழில்களைப் பரவலாக உருவாக்கி வருகிறோம். இதில் மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது. இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரத்தினை, தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்குவதற்காக, அங்கு நவீன உட்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில், பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், ஓசூர் நகரத்திற்கான ஒரு புதிய பெருந்திட்டம் (Master Plan) தயாரிக்கப்பட்டு, அது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஓசூர் மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என இந்த அரசு கருதுகிறது. ஒசூரில் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்பதனை இந்த மாமன்றத்தில் நான் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

திராவிட இயக்கம் என்பது மாபெரும் அறிவியக்கம். அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தலைமை நிலையத்துக்கு பேரறிஞர் அண்ணா ‘அறிவகம்’ என்று பெயர்ச் சூட்டினார். தற்போதைய தலைமை நிலையத்துக்கு ‘அறிவாலயம்’ என்று பெயர்ச் சூட்டினார் கருணாநிதி. தி.மு.கழகம் எங்கெல்லாம் கிளை பரப்பியதோ, அங்கெல்லாம் படிப்பகங்கள் உருவாக்கப்பட்டன. அரசியல் இயக்கமாக மட்டுமல்லாமல், தமிழ் இலக்கிய இயக்கமாகவும் வளர்ந்தது.

வாசிப்பதற்கும் சுவாசிப்பதற்கும் வேறுபாடு காணமுடியாத வாழ்க்கை வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. பாதி வரை படித்த புத்தகங்களின் மீதியைப் படிப்பதற்கு ஏதுவாக அறுவை சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னவர் பேரறிஞர் அண்ணா அந்த பேரறிஞரின் நூற்றாண்டைக் கொண்டாடி மகிழ்ந்த தலைவர் கருணாநிதி, கோட்டூர்புரத்தில் எட்டு மாடிகள் கொண்ட, ஒரே நேரத்தில் 1200 பேர் உட்கார்ந்து படிக்கிற வகையில், மூன்று லட்சத்து முப்பத்து மூன்றாயிரம் சதுர அடிகள் கொண்ட நூலகத்தை உருவாக்கி, அதற்கு ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்’ என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தார்.

அந்தவகையில், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வசிப்பவர்களும் நூலகங்கள் மூலம் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், சங்கம் வைத்து மாத்தமிழ் வளர்த்த மதுரையில் 15-7-2023 அன்று கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டு, என்னால் திறந்து வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் வாழ் பொது மக்களுக்கும் இளைய தலைமுறைக்கும் பயன்படும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம், கலைஞர் கருணாநிதி பெயரில் அமைக்கப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தோம். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

அந்த வரிசையில் காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்பதை இந்த அவைக்கு மட்டற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக அது அமைந்திடும். தினந்தோறும் திட்டங்கள் தீட்டும் நாளாக, விடியும் நாளாக, விடியல் தரும் நாளாக உருவாக்கி வருகிறோம் என்று முதல்வர் பேசினார்.