செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையே தி.மு.க. எதிர்க்கிறது – தமிழிசை சவுந்தரராஜன்

கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் தி.மு.க.வுக்கு செங்கோலின் தன்மையும் புனிதத்துவமும் தெரியாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ‘செங்கோல் என்பது கொடுங்கோலின் சின்னம் கிடையாது’, ‘செங்கோல் என்பது மக்களாட்சியின் சின்னம்’. எந்த தமிழ் அரசரும் மக்கள் ஆட்சி மீறி ஆட்சி நடத்தவில்லை; இது தமிழ் மண்ணின், நீதி தவறாமல் ஆட்சி நடப்பது என்பதற்கு ஆன குறியீடு தான் செங்கோல். ஆக பாராளுமன்றமும் அப்படி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாரத பிரதமர் அதை நிறுவினார். கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த செங்கோலின் தன்மையும் புனிதத்துவமும் தெரியாது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையே திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கிறது. அரசியலுக்காக எந்த கீழ்த்தரமான கருத்துக்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படுத்துவார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. சமாஜ்வாதி கட்சியை சார்ந்தவர்கள் எதிர்க்கலாம்; ஆனால் நம் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் எதிர்க்கலாமா? திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மையான பொய் முகம் கிழித்தெறியப்பட்டிருக்கிறது. தமிழும் தமிழ் கலாச்சாரமும் அவர்களின் அரசியலுக்காகத்தான் அவர்களின் உணர்வுகளுக்காக அல்ல! என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.