கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர். எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது. மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மொத்தம் 225 பேர் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவத்தில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகிறது அதிமுக. சட்டப்பேரவையில் கடந்த நான்கு நாட்களாக கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனவும் அமளியில் ஈடுபட்டது. அமளியால் நடப்புக் கூட்டத் தொடர் முழுவதுமே அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இந்த உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, செங்கோட்டையன், ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், தங்கமணி ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் இபிஎஸ் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து எனது தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டமன்றத்தில் முயன்றும் திமுக முதல்வர் தயங்குவது ஏன்? கள்ளச்சாராய மரணங்கள் 60-ஐ தாண்டியுள்ள நிலையில், இன்றுவரை கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்? பயமா ஸ்டாலின்?. கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிப்பதோடு, இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
போராட்டம் தொடர்பாக பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். சட்டசபையில், இந்த பிரச்சினையை எழுப்ப வாய்ப்பு தரவில்லை. சபாநாயகர் அப்பாவு ஒருதலைபட்சமாக நடந்துகொண்டுள்ளார். ஜனநாயகம் கொல்லப்படுகிறது. இது தமிழகத்தில் பற்றி எரியும் பிரச்சினை. அப்படிப்பட்ட பிரச்சினையை பற்றி விவாதிக்க ஒருமணிநேரம் கேள்வி நேரத்தை ஒத்திவைக்க மறுக்கிறார் சபாநாயகர்” என்று தெரிவித்துள்ளார்.