அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டம் : பிரேமலதா நேரில் ஆதரவு

அதிமுகவுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நடவடிக்கையை கண்டித்தும், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக உண்ணாவிராத போராட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார். உண்ணாவிரத போராட்டத்திற்கு வருகை தந்த பிரேமலதா விஜயகாந்தை, எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.

அப்போது பிரேமலதா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி சட்டசபையில் விவாதிக்காமல் வேறு எங்கு பேசுவது?. சட்டசபையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக திமுக அரசு பேசவிடாமல் தடுக்கிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்தை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும். அதிமுகவுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக நாளை சந்திக்கிறது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிக்க வேண்டும் என்பதுதான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கை; அப்போது எம்.பி.,க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். ஆனால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான அதிமுகவினர் பேசினால் தடுக்கிறார்கள். நாடாளுமன்றம் என்றால் ஒரு நீதி, சட்டப்பேரவை என்றால் ஒரு நீதியா?. 2026-ல் நிச்சயம் ஆட்சி மாறும். அதிமுக-தேமுதிக கூட்டணியில் நல்லாட்சி மலரும்” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.