நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை : ஆம் ஆத்மி எம்.பி.க்கள் புறக்கணிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டாக பங்கேற்கும் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக உரையாற்றி வருகிறார். இதனை ஆம் ஆத்மி கட்சியினர் புறக்கணித்துள்ளனர்.

குடியரசுத் தலைவரின் உரையை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும். இதில் அவை உறுப்பினர்கள் பேசுவார்கள். இந்தச் சூழலில், “நீதி என்ற பெயரில் நடக்கும் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அவசியம்” என ஆம் ஆத்மியின் சந்தீப் பதக் தெரிவித்துள்ளார்.

“டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கைதை எதிர்த்து நாங்கள் மாநிலங்களவையில் போராட்டம் மேற்கொள்கிறோம். நாங்கள் குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிக்கிறோம். நாட்டின் உயரிய இடத்தில் குடியரசுத் தலைவரும், அரசியலமைப்பும் உள்ளது. ஆனால், நீதி என்ற பெயரில் நடக்கும் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அவசியம்.

இது குறித்து நாங்கள் இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் கலந்து பேசவில்லை. ஆனால், எங்கள் கட்சி உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரின் உரையில் பங்கேற்கமாட்டார்கள்” என சந்தீப் தெரிவித்தார்.