“திமுக எம்.பி.க்கள் கொத்தடிமைகள்” – ‘உதயநிதி வாழ்க’ முழக்கம் மீது ஜெயக்குமார் விமர்சனம்

மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றபோது உதயநிதி வாழ்க என கோஷமிட்டதன் மூலம் தாங்கள் கொத்தடிமைகள் என்பதை திமுக எம்.பி.,க்கள் நிரூபித்துவிட்டனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.

“சிலம்புச் செல்வர்” ம.பொ.சிவஞானத்தின் 119-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “மாபொசியின் பிறந்த நாள் விழா, அரசு விழாவாக கொண்டாட முக்கிய காரணம் அதிமுக தான். சென்னையும், திருத்தணியும் தமிழ்நாட்டோடு இருப்பதற்கு மாபொசி தான் காரணம். அவர் போராடவில்லை என்றால் சென்னை நம்மிடம் இருந்திருக்காது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று 2 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். தலை கொடுத்தாவது தலைநகரை காப்போம் என போராடியவர் மாபொசி. அவர் ஒரு தமிழ் மகான்.

மக்களவையில் உறுப்பினர்களாக நேற்று பதவியேற்ற திமுக எம்பிக்கள், தாங்கள் ஒரு கொத்தடிமைக் கூட்டம் என்பதை நிரூபித்துவிட்டனர். பதவியேற்பின்போது, உறுதிமொழியை வாசிப்பதுதான் மரபு. ஆனால், திமுகவின் மூத்த தலைவர்களான ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், செல்வகணபதி உள்ளிட்டோர், பதவியேற்பின்போது உதயநிதி வாழ்க என கோஷமிட்டனர். நேற்று பெய்த மழையில் இன்று முறைத்த காளாண் உதயநிதி. ஆனால், திமுகவின் மூத்த தலைவர்களே தன்மானத்தை இழந்து கொத்தடிமைகள்போல் நடந்து கொண்டதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.

திமுக எம்பிக்களின் இந்த செயல், வாக்களித்த மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. கொத்தடிமைகளை டெல்லிக்கு அனுப்பிவிட்டோமே என்று வாக்காளித்த மக்கள் வேதனைப்படுகின்றனர். ஜனநாயகம் இல்லாத கட்சி திமுக. அந்த கட்சியில் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர் நினைப்பது தான் நடக்கும். அடுத்ததாக திமுகவினர், இன்பநிதிக்கும் சேவை செய்வார்கள். பதவிக்காக தன்மானத்தை இழந்து நிற்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களை நினைத்துத்தான் எம்ஜிஆர் அன்றே அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு என பாடினார்.

இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க திமுக அரசு தவறி விட்டது. திமுக ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை மீனவர்கள் திருடி பயன்படுத்திக் கொள்வது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று. அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் பெரிதாக நடைபெறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பிக்கள், மத்திய அமைச்சரை ஏன் சந்திக்கவில்லை? தாக்குதல் சம்பவங்களை தடுக்க அதிமுக ஆட்சி காலத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த 3 ஆண்டில் திமுக ஏன் எதுவும் செய்யவில்லை? கும்பக்கரண அரசாக திமுக அரசு உள்ளது.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தை நடத்த திமுக விடவில்லை. விவாதிக்க திமுக அஞ்சுகிறது. எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்து சட்டசபையை நான் நடத்தி உள்ளேன். திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் போல தற்போதைய சபாநாயகர் செயல்படுகிறார். இது ஜனநாயகத்திற்கு கேடு. இடைத்தேர்தலை புறக்கணிக்கம் முடிவை அதிமுக எடுத்துவிட்டது. இதே முடிவை அனைத்து எதிர்கட்சிகளும் எடுக்க வேண்டும். அப்போதுதான், தேர்தல் ஆணையம் விழித்து கொள்ளும். திமுகவுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் புறக்கணிப்பு மூலம் பாடம் புகட்ட வேண்டும்” என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.