புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில் அரிமளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில்; போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாள் கருத்தரங்கம் 

புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில் புதுக்கோட்டை அரிமளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாள் கருத்தரங்கம்  மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர்  எஸ.பி.சுப்பையா  தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் எஸ்.மாரிமுத்து, புதுகைப் பாவை இலக்கியப் பேரவையின் பொருளாளர் மு.கீதா, சமூக ஆர்வலர் பிரபாகரன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். 

புதுகைப் பாவை இலக்கியப் பேரவையின் செயலர், பேராசிரியர் சே.சுசிலாதேவி கலந்து கொண்டு வினாடி-வினாப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியது- மனித சமூகத்தைச் சீர்கெடுப்பதில் போதைப் பொருள் உபயோகம் முதலிடம் பிடிக்கிறது என்று கூட சொல்லலாம். இதனுடைய பயன்பாடு அறிவை மழுங்கச் செய்து, சிந்திக்கும் திறனை தவறான பாதையில் இழுத்துச் செல்கிறது. இந்த விழிப்புணர்வை பெண்கள் அமைப்பாகிய நாங்கள் நடத்துவதற்கும் ஒரு காரணம் உள்ளது. என்னவென்றால், போதைப் பொருள் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒருவர் பெண் என்பதால் தான் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்வை நடத்துவதற்கு முன்வந்துள்ளோம். அது போல பள்ளி, கல்லூரிகளில் இந்நிகழ்வை நடத்துவதற்கும் ஒரு காரணம் உண்டு. இந்த போதைக்கு அடிமையானவர்களில் கிட்டத்தட்ட 85சதவீத விழுக்காடு படித்தவர்கள், அதில் 70-க்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்கள் என்பது தான் முக்கியமான விஷயம். 

பள்ளி மாணவர்கள் மத்தியிலே போதைப் பழக்கம் அதிகரித்து வருவது வேதனை தரும் விஷயமாகும். போதையினால் வகுப்பிலேயே மாணவர்கள் ஆட்டம் போடுவது, அசிரியரை அவமானம் படுத்துவது போன்ற அவலங்கள் இப்போது கல்வி நிலையங்களிலே அரங்கேறி வருகின்றன சமூக வலைத்தளம், ஊடகங்களில் பார்க்கும் போது ரொம்பவும் கவலைப்பட வேண்டியுள்ளது. அன்றாட வாழ்வில் சாதாரண பிரச்னைகளைக் கூட சமாளிக்க முடியாதவர்கள் கையிலெடுப்பவை தான் இந்த போதை பழக்க வழக்கம். இளைஞர்கள் நாளைய சமூகத்தின் முன்னோடிகள். இவர்கள் தான் போதைப் பொருள்களை ஒழுப்பதில் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அதே போன்று மற்றவர்களுக்கு தீமைகள் செய்யாமலும், தீமைகளுக்குத் துணைபோகமலும், தீமைகளைக் கற்றுக் கொடுக்காமலும், முடிந்தவரை தீமைகளைத் தடுத்தக் கொண்டிருப்பதே ஒவ்வொரு குடிமகனின் முக்கிய கடமையாக கருத வேண்டும். 

இந்தப் போதையில் ஒரு வித சுகம் கிடைப்பதாகச் சிலர் எண்ணுகின்றனர். ஆனால் விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளாய் வாழ்வைத் தொலைக்கின்றனர். அற்ப சுகம் தருகின்ற போதை அழிவுக்குக் கொண்டு செல்வதை இவர்கள் உணர்வதில்லை. மது உடல் ஆரோக்கியத்தை கறையான் மரக்கட்டைகளை அரிப்பது போல், அரித்துக் கொண்டிருப்பதை மதுபிரியர்கள் அறிவதில்லை. மது அருந்துபவர்கள் தம்மை தாமே அழித்துக் கொண்டும். பிறரது வாழ்;கையும் கேள்விக்குறியாக்கின்றனர். சில வீடுகளில் தந்தையர்கள் மது போதையில் தாயுடன் சண்டை போடும் போதும், வெளியிடங்களில் அட்டகாசங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இதனைப் பார்க்கிற குழந்தைகள் மனது மிகவும் வேதனைப்படுகிறது. பேனாவைப் பிடித்து எழுத வேண்டிய கையாள் இன்று தீப்பெட்டியை பற்றவைத்து சிகரெட்டை பிடிக்கிறது. 

உபயோகிப்பவரும், உற்பத்தியாளரும் குற்றவாளிகள் தாம். ஆனாலும் முதல் குற்றவாளி உற்பத்தியாளரே. இதனை உணர்ந்து உற்பத்தியைத் தடுக்கும் விதமாகச் செயல்பட்டால் எல்லாம் சரியாகி விடும் என்றார். முடிவில் அனைத்து மாணவர்களும் போதையை தடுப்போம். ஒழிப்போம் போன்ற எண்ணற்ற உறுதிமொழியை ஏற்றனர். முடிவில் கவிஞர் ப.வெங்கடேசன் நன்றி கூறினார்.