போராடியவர்களை அடக்குவது திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது : பாஜக மாநில நிர்வாகி கார்த்திக் கோபிநாத்

கள்ளக்குறிச்சி சம்பவத்தை சரி செய்வதற்கு பதிலாக, அதனை எதிர்த்து போராடியவர்களை அடக்குவது திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது என பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை தலைவர் கார்த்திக் கோபிநாத் குற்றச்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு எதிராக திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். ஜனநாயக முறைப்படி நடந்த ஆர்ப்பாட்டத்தில், போலீஸார் அனைத்து இடங்களிலும் பாஜகவினரை குற்றவாளிகளை போல் கைது செய்து இழுத்து சென்றிருக்கிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தை கண்டு திமுக அரசு பயந்ததால்தான் எங்களை போராட அனுமதிக்கவில்லை. திமுக அரசின் தோல்வி மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, கள்ளக்குறிச்சி விவகாரத்தை சரி செய்வதற்கு பதிலாக, அதை எதிர்த்து போராடியவர்கள் மீது அடக்குமுறையை காட்டி இருக்கிறது.

கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டி என்பவரது வீட்டில் திமுக பிரமுகர் புகைப்படம் தான் இருக்கிறது. யாருடைய ஆதரவில் அங்கு கள்ளச்சாராயம் விற்பனையாகிறது என்பது அங்குள்ள மக்களிடம் கேட்டாலே தெரிய வரும். இந்த சம்பவத்துக்கு பிறகு கள்ளச் சாராயம் விற்பவர்களை கைது செய்ய தெரிந்த காவல் துறைக்கு, ஏன் இதை முன்கூட்டியே தடுக்க தெரியவில்லை?

கடந்த அதிமுக ஆட்சியில் ஏதேனும் தவறு நடந்தால், உடனே அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என கூறிய ஸ்டாலின், கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு ஏன் துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்யாமல் இருக்கிறார். கடந்த ஆண்டு மரக்காணத்தில் நடைபெற்ற சம்பவத்துக்கு பிறகும் கூட, கள்ளச் சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மதுவை முழுமையாக ஒழிப்பது என்பது சாத்தியமில்லாததுதான். ஆனால், அதற்கு பதிலாக தமிழக அரசு மதுக்கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்கலாம். இதனால், பனை மர விவசாயிகளின் வாழ்வாதாரமாவது மேம்படும்.

கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த உடனேயே இதற்கு எதிராக குரல் கொடுக்க கமல்ஹாசனுக்கு தைரியம் இல்லை. நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியது வரவேற்கத்தக்கது. ஆனால், இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும் முதல்வர் ஸ்டாலின் ஏன் அங்கு செல்லவில்லை? இதே போல், பல நடிகர்கள் இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் ஏதேனும் அவலம் நடந்த உடனயே பொங்கி எழுந்தார்கள். இப்போது, மவுனமாக இருக்கிறார்கள். இவர்கள் திமுக ஆட்சியை எதிர்க்க திராணி அற்றவர்கள் என்று கூறினார்.