பள்ளி மாணவர்களுக்கு அஞ்சலகம் மூலம் உடனடியாக சேமிப்பு கணக்கு தொடங்கி தரப்பட்டு வருகிறது புதுக்கோட்டை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு ஆதாருடன் கூடிய அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடக்க முகாம்  இன்று 24-06-2024 ( திங்கட்கிழமை) மாலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில்  முதன்மைக்கல்வி அலுவலர் ( பொ) கூ.சண்முகம் கலந்துகொண்டு  தலைமை தாங்கி  பேசும்போது கூறியதாவது,  அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்காக  சேமிப்பு கணக்கு துவங்குவதற்காக பெற்றோர்களையும், மாணவர்களையும் அலைக்கழிக்கக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இம்முறையில்  அஞ்சலகப்பணியாளர்கள் பள்ளிக்கே வந்து ஆதாருடன் கூடிய அஞ்சலக சேமிப்பு கணக்கினை மாணவர்களுக்கு  துவக்கித்தரும் உன்னதமான திட்டமாகும். இம்முறையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில்  தகுதியுள்ள எந்த மாணவ,மாணவியரும் விடுபடாமல் ஆதாருடன் கூடிய அஞ்சலக சேமிப்பு கணக்கினை மாணவர்களுக்கு  துவக்கித்தர  தலைமையாசிரியர்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பி. முருகேசன்  கலந்துகொண்டு 30 மாணவிகளுக்கு ஆதாருடன் கூடிய அஞ்சல க சேமிப்பு கணக்கினை தொடங்கி அதன்  புத்தகங்களை முதன்மைக்கல்வி அலுவலருடன் இணைந்து  மாணவிகளுக்கு வழங்கி பேசும்போது கூறியதாவது, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகளை அரசு வழங்கி வருகிறது. இதற்காக  ஆதாருடன் கூடிய அஞ்சலக சேமிப்பு கணக்கினை துவங்க வேண்டும். இம்முறையில்  அஞ்சல் துறை மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும் இணைந்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி37 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு துவக்கப்படவேண்டும். பத்து வயதிற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு அஞ்சலக கணக்குகளும், பத்து வயதிற்கு மேற்பட்ட  மாணவர்களுக்கு ஐ.பி.பி.பி( IPPB) கணக்குகளும் தொடங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட  கணக்குகள் துவக்கும்போது கண்டிப்பாக ஆதார் எண்ணை இணைத்து துவக்க வேண்டும். அரசின் உதவித்தொகையைப்பொறுத்து  வருட வருமானம் ரூ 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை உள்ளவர்கள் இம்முறையில் அஞ்சலக கணக்கினை தொடங்கிக்கொள்ளலாம். வாரிசு என்ற இடத்தில் கண்டிப்பாக தந்தை பெயரோ, தாயார் பெயரோ  அல்லது 18 வயது நிரம்பிய உடன் பிறந்தவர்களின் பெயரோ, உறவினர் பெயரோ இவர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் காப்பாளர் கட்டாயம் வேண்டும். மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும்பட்சத்தில் அவர்கள் ஐ .பி.பி.பி மொபைல் ஆப்பினை பதிவிறக்கம் செய்து அதன் பயன்களை தெரிந்துகொள்ளலாம்.ஐ.பி.பி.பி ஆப்  மூலம் அஞ்சலக திட்டங்களுக்கு எளிமையாக பணம் செலுத்தலாம். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பள்ளிகளில் ஆதாருடன் கூடிய சேமிப்பு கணக்கு இல்லாத மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு உடனடியாக அஞ்சலகத்தில்  கணக்கினை தொடங்கி பயன்பெற வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் சுசரிதா வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். நிறைவாக பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் பரமசிவம் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய அஞ்சல் கட்டண  வங்கியின் மேலாளர் கார்த்திக், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகையன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெ.சி.சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி,இந்திய அஞ்சல் கட்டண வங்கியின் உதவி மேலாளர் சுவாதி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.