மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். இந்த விழாவை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.
8 முறை எம்.பி.யாக இருந்த கேரளாவின் கொடிகுன்னில் சுரேஷை இடைக்கால சபாநாயகராக நியமிக்காமல், 7 முறை எம்பியாக இருந்த பர்த்ருஹரி மஹதாப்பை இடைக்கால சபாநாயகராக அறிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இவ்விழாவை புறக்கணித்தனர்.
நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 9-ம் தேதி, நாட்டின் பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹதாப் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்தார். இந்நிலையில், 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.