பெங்களூரில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கில் கவிஞர் தங்கம் மூர்த்தி விருது பெற்றார்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு நாள் கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களிலிருந்து கல்வியாளர்கள் பங்கேற்றனர். எதிர்காலக் கல்வி சந்திக்க இருக்கும் சவால்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப அறிவை வகுப்பறையில் பயன்படுத்துவது, விளையாட்டுத் துறையில் மாணவர்களை வளர்ப்பது,  மகிழ்ச்சியான வகுப்பறைகளை உருவாக்குவது குறித்து இந்தியாவின் சிறந்த கல்வியாளர்கள் உரையாற்றினார்கள்.

கருத்தரங்க நிறைவில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்திக்கு  35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவங்களோடு கல்விப் பணியாற்றி வருவதற்காக சிறந்த முதல்வருக்கான விருது வழங்கப்பட்டது. விருதினை தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கேப்டன் நாகராஜ் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரித்திகா ஆகியோர் வழங்கினர்.

கவிஞர் தங்கம் மூர்த்தி தனது கல்விப் பயணத்தில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினையும், மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதினையும் பெற்றவர். இந்தியா முழுவதும்  நடைபெறுகிற கல்வி கருத்தரங்குகளில் பங்கேற்று வருபவர். குறிப்பாக டெல்லி, சண்டிகர், பெங்களூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற கல்வி கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றியவர். பள்ளியில் இணை பாடத்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக சென்ற ஆண்டு சண்டிகர் பல்கலைக்கழகம் வழங்கிய விருதினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பெற்றது.