தூத்துக்குடி அருகே சாலையோரத்தில் உள்ள தெருக் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள முக்கானியில் தேவர் தெரு பகுதியில் சாலையோரம் உள்ள குடிநீர் குழாயில் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் இன்று காலை தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வேகமாக சென்ற இனோவா கார், தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் முக்காணி வடக்கு யாதவர் தெருவைச் சேர்ந்த நட்டார் சாந்தி (45), தேவர் தெருவைச் சேர்ந்த அமராவதி (50), பார்வதி (40) ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த முக்காணி வடக்கு யாதவர் தெருவைச் சேர்ந்த சண்முகத் தாய் (49) என்பவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, விபத்து குறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் (27) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.