கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரண விவகாரத்தில் இந்தியா கூட்டணி மவுனம் காப்பது குறித்து பாஜக கண்டனம்

தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள கள்ளச் சாராய மரண விவகாரத்தில் இந்தியா கூட்டணி அமைதி காப்பது குறித்து பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்பி சம்பித் பத்ரா, “தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் பருகி 57 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 200 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது ஒரு முக்கியமான பிரச்சினை.

மல்லிகார்ஜுன் கார்கே, பிரியங்கா காந்தி வத்ரா, ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் திமுகவினர் உட்பட இந்தியா கூட்டணியினர் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். இந்த சம்பவத்தில் பட்டியலினத்தவர்கள் 32 பேர் உயிரிழந்துள்ளதால், நான் அதை கொலை என்று சொல்வேன். இது மரணம் அல்ல.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவராக அறியப்படும் கோவிந்தராஜின் சாராயக் கிடங்கு நகரின் மையப் பகுதியில் பரபரப்பான தெருவில் அமைந்துள்ளது. இன்னொரு மிகப்பெரிய விஷயம் கோவிந்தராஜின் வீட்டுக்கு வெளியேயும், உள்ளேயும் திமுக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அப்படியானால் முதல்வர் ஸ்டாலினிடம் எனது கேள்வி, இந்தச் சம்பவத்தில் நீங்கள் உடந்தையா, இல்லையா?. என்பது தான். உங்கள் சார்பாக யார் பதில் சொல்வார்கள். இந்தப் பிரச்சினையை எழுப்புவது தங்களின் அரசியலுக்கு நல்லது இல்லை என்பதால் பெரும்பாலான கட்சிகள் அமைதி காக்கின்றன.” என்று விமர்சித்துள்ளார்.