“இந்துக்கள் மனம் புண்படுத்தும் விதத்தில் நீதிபதி சந்துரு குழு பரிந்துரை” – இந்து முன்னணி கண்டனம்

இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதத்தில் அரசுக்கு பரிந்துரைகள் வழங்கிய நீதிபதி சந்திருவின் நடவடிக்கையை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. என, அவ்வமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கோவை மாநகர மாவட்ட இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் இந்து வியாபாரிகள் நலச்சங்க அறிமுக கூட்டம் மற்றும் இஞைர்கள் இணைப்பு விழா ராம் நகரில் உள்ள ஐயப்ப பூஜா சங்கத்தில் இன்று நடந்தது.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, இன வேறுபாடுகளை களைவதற்கான வழிமுறைகளை வகுக்க பணி ஓய்வு பெற்ற நீதிபதி சந்திரு தலைமையில் குழு உருவாக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் நெற்றியில் திலகம், பொட்டு, பூ வைக்க கூடாது. தங்களின் கைகளில் கயிறுகளை, கட்டி செல்லக்கூடாது என பரிந்துரைத்துள்ளது. சிலுவை, தொப்பி, பர்தா அணியக்கூடாது என கூறவில்லை. நீதிபதி சந்திரு கம்யூனிஸ்ட் சிந்தனை கொண்டவர். இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பரிந்துரை செய்துள்ள அவரின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என நாங்கள் தொடந்து வலியுறுத்தி வருகிறோம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். டாஸ்மாக் மதுபான விற்பனையால் விதவைகள் அதிகரித்துள்ளதாக அரசியல் கட்சியனர் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆட்சி பொறுப்பேற்ற பின் அக்கருத்தை காற்றில் பறக்கவிடுகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர் முன்னரே ஆய்வு செய்திருக்க வேண்டும். சரியான பராமரிப்பு இல்லாததே கயிறு அறுந்து விழுந்ததற்கு காரணம். மக்கள் இழுத்தால் கயிறு அறுந்து விழத்தான் செய்யும் என அறநிலையைத்துறை அமைச்சர் பொறுப்பில்லாமல் பதிலளித்துள்ளார். எனவே அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கள் உடலுக்கு நல்லது என கூறுகின்றனர். தமிழகத்தில் கள்ளுக்கு அனுமதி கொடுத்தால் விவசாயிகளுக்கு பயன் தரும்” என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.