கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க அவர்கள் மருத்துவமனைக்கு காலதாமதமாக வந்ததே காரணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளது பச்சைப் பொய் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்விநேரத்தை ஒத்திவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் அப்பாவு கேள்வி நேரத்துக்குப் பின்னர் விவாதிக்கலாம் எனத் தெரிவிக்க அதிமுக எம்எல்ஏ.,க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இரண்டாவது நாளாக இன்றும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் இபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும். கேள்வி நேரத்தை ஒத்திவையுங்கள். மக்கள் உயிர் பறிபோயுள்ளது. இந்த விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினோம். ஆனால் அதை சபாநாயகர் ஏற்கவில்லை. அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
நேற்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை பார்த்துவிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சிகிச்சையில் ஓமிபிரசோல் மருந்து பயன்படுத்துவதாகச் சொன்னார். நான் சொன்னது மெத்தனால் விஷ முறிவுக்கான ஃபோமிப்ரசோல், ஆனால் அமைச்சர் ஓமிபிரசோல் என்ற அல்சர் மருந்து பற்றி சொல்கிறார். இந்த மருந்து இல்லவே இல்லை என்றே நான் குற்றஞ்சாட்டினேன்.
அது மட்டுமல்ல கள்ளச் சாராய மரணங்கள் அதிகரிக்க பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்கு தாமதமாக வந்ததே காரணம் என்று அமைச்சர் கூறியுள்ளார். இது பச்சைப் போய். கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் சிகிச்சைக்கு தாமதமாக மருத்துவமனை வந்ததால் தான் உயிரிழப்புகள் அதிகமாகிவிட்டது என்று அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், 3 பேர் இறந்தவுடன் மாவட்ட ஆட்சியர் ஒரு பேட்டி அளிக்கிறார். அதில் அவர் ஒருவர் வயிற்றுப் போக்கு, ஒருவர் வலிப்பு, ஒருவர் வயது மூப்பு காரணமாக இறந்ததாகக் கூறுகிறார். இதனை நம்பி லேசான உபாதைகள் இருந்தவர்கள் கூட மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்ளாமல் உயிர்கள் பறிபோயுள்ளன. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி 183 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 55 பேர் பலியாகியுள்ளனர். ஆட்சியர் உண்மையைச் சொல்லியிருந்தால் இத்தனை உயிர்கள் பறிபோயிருக்காது.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விற்பனை வலையில் திமுக கவுன்சிலர்களுக்கு தொடர்பு இருக்கிறது. அதனால் அரசு அமைக்கும் விசாரணை ஆணையத்தால் உண்மை வெளிவராது. மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் நிச்சயமாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். நாங்கள் இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பின்னர் இன்றைய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தைப் புறக்கணித்து அதிமுக எம்எல்ஏ.,க்கள் சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.