கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் இதுவரை 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 10 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் சாராய வியாபாரி கண்ணுகுட்டி , அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகிய மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் மூன்று பேரையும் வரும் ஜூலை 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சின்னதுரை நேற்று தனிப்படை போலீஸாரால் பண்ருட்டி அருகே கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மெத்தனால் விற்பனையில் தொடர்புடைய புதுச்சேரி ஜோசப்ராஜா என்ற குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் விரியூர் லூர்துசாமி, சூசைநாதன், மாதவச்சேரி ராமர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில், மரக்காணத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரும், கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்ற பெண் சாராய வியாபாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதன்குமார் என்பவர் கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் எரி சாராயம் அருந்தி 27 பேர் உயிரிழப்புகள் ஏற்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.