“மதுரை மாவட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக யாரும் எட்டிப்பார்க்கவில்லை. இந்த ஆட்சி பொறுப்பேற்றதும் கோரிப்பாளையம், அப்போலோ மருத்துவமனை பாலப் பணிகள் ஒரே நேரத்தில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்று பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
தமிழக சட்டப் பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தில், மதுரை (தெற்கு) தொகுதி உறுப்பினர் எம்.பூமிநாதன் பேசும்போது, “எனது தொகுதியில் ரூ.190 கோடிக்கு பாலம் அமைத்துத் தந்ததற்கு நன்றி. அண்ணா சிலையில் இருந்து அவனியாபுரம் பகுதிக்கு பாலம் அறிவிக்கப்பட்டது. அந்த பாலம் எப்போது நடைமுறைக்கு வரும்?” என்றார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “மதுரை மாவட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக யாரும் எட்டிப்பார்க்கவில்லை. இந்த ஆட்சி பொறுப்பேற்றதும் கோரிப்பாளையம், அப்போலோ மருத்துவமனை பாலப்பணிகள் ஒரே நேரத்தில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நெல்பேட்டை அண்ணாசிலை பாலம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்தப் பாலத்தை அமைப்பதற்கான வடிவமைப்பை பார்க்கும் போது, நகரப்பகுதியில் மிகவும் நெரிசலான பகுதியில் செல்கிறது. நில எடுப்பு பணிக்காக பல கோடி ரூபாய் செலவழிக்க வேண்டி வரும். பெரிய மாட மாளிகைகள், கோபுரங்கள் என எல்லாவற்றையும் இடித்து தரைமட்டமாக்கினால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். அதனால் தான் மீண்டும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்படி கூறியுள்ளோம். நீண்ட பாலமாக இல்லாமல், அங்கங்கே உள்ள நான்கு வழிச்சாலை சந்திப்புகளில் பாலங்கள் அமைக்க ஆய்வு நடைபெற்று வருகிறது,” என்றார்.
இதேபோல் நாங்குநேரி தொகுதி உறுப்பினர் ரூபி மனோகரன் பேசுகையில்,“திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்ல சில நேரங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எப்போதும் பக்தர்களை அனுமதிக்கும் வகையில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்,” என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “நம்பிகோயில் வனத்துறை இடத்தில் உள்ளது. இதுபோன்று தமிழகம் முழுவதும் 34 இடங்களில் வனப்பகுதியில் இருக்கும் கோயில்கள் கண்டறியப்பட்டுள்ளன. வனத்துறை சட்டப்படி, அப்பகுதிகளில் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை கட்ட இயலாது.
இதனால், தற்காலிக அமைப்புகள் மட்டுமே நிறுவப்படுகின்றன. தற்போது எங்கள் துறை செயலர், வனத்துறை செயலர் ஆகியோர் அடங்கிய கூட்டுக்குழு இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. வனப்பகுதியில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத்தரும்படி முதல்வரும் உத்தரவிட்டுள்ளார். எனவே, விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார்.
விளவங்கோடு தொகுதி புதிய உறுப்பினர் தாரகை கத்பர்ட் பேசுகையில், “விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட கோதையாறு பகுதியில் யானை மிதித்து ஒருவர் இறந்துள்ளார். இப்பகுதியில் அடிக்கடி யானைகள் வருகிறது. இதை தடுப்பதுடன், இறந்தவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,” என்றார். இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்,“சம்பவம் தெரிந்ததும் இறந்தவர் குடும்பத்துக்கு வனத்துறை நிதி ரூ.10 லட்சம் உட்பட ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.