நீட் தேர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு புதுக்கோட்டை காவல்துறை அனுமதி மறுத்ததால் போராட்டமாக மாறியது.
தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக ஜூன் 22 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறைகூவல் விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் தயாராகினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என காவல்துறை தெரிவித்தது. இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோதும் சரியான பதில் இல்லை. இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் இருந்து காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் நோக்கி முழக்கங்களுடன் ஊர்வலமாகச் சென்றனர்.
போலீசார் இடையில் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததற்கான காரணத்தை விளக்குமாறு கட்சித் தலைவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுவட்டனர். தொடர்ந்து கைது செய்ய முயன்ற போலீசாரைக் கண்டித்து முழக்கங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேறு வழியின்றி காவல்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள அனுமதி அளித்தனர்.
தொடர்ந்து சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலளார் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மகாதீர், விதொச மாவட்டச் செயலாளர் டி.சலோமி, விச மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.சுசிலா மற்றும் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.