கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் பிஜேந்தரின் குடும்பத்திரை தேடி கண்டறிந்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
தமிழகத்திலுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டைமேடு, கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தோர் கடந்த 18, 19ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தனர். அதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மொத்தம் 184 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி, விழுப்புரம் மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதில் 41 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறந்தவரில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிஜேந்தரும் ஒருவர்.
சம்பவம் நடந்த கள்ளக்குறிச்சி பகுதியில் ஐந்து ஆண்டுகளாக பிஜேந்தர் பானி பூரி விற்பனை செய்து வருகிறார். அவரது வாடிக்கையாளர்கள் மூலம் கள்ளச்சாராயம் அறிமுகமாக, சம்பவ தினத்தன்று சாராயம் குடித்து உயிரிழந்துள்ளார். இறந்தவரில் இவர் ஒருவர் மட்டுமே வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அரசு அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரணம் அவரது குடும்பத்துக்கு கிடைக்குமா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் கூறியதாவது: “இறந்த பிஜேந்தர் குடும்பத்தை கண்டறிந்துள்ளோம். அவரது குடும்பத்தினர் நாளை கள்ளக்குறிச்சி வருகின்றனர். அவர்களிடம் உடலை ஒப்படைத்து ரூ.10 லட்சம் நிவாரணம் தரவுள்ளோம்” என அதிகாரிகள் கூறியுள்ளனர்.